திமுக - தவெக இடையே தான் போட்டியே" இபிஎஸ்க்கு 3வது இடம் தான்.. விஜய் சொன்னதை ரிப்பீட் செய்த டிடிவி
சென்னை: திமுக - தவெக இடையே தான் போட்டி என்றும், விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் போது வரும் 2026 தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் 3வது இடம் தான் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்த நிலையில், அதில் பேசிய விஜய் வரும் 2026 தேர்தலில் திமுக - தவெக இடையே தான் போட்டி என்றும், நிச்சயம் வாகை சூடும் வரலாறு திரும்பும் என்றும் பேசியிருந்தார். மேலும் பொதுக்குழுவில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விஜய் பேச்சுக்கு டிடிவி பதில்
விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பதால், அதிமுக - தவெக இடையே கூட்டணி அமையும் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் திமுக - தவெக இடையே தான் போட்டி என விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், திமுக தவெக இடையே தான் போட்டி என்றும், இபிஎஸ்க்கு 3வது இடம் தான் என்றும் கூறியுள்ளார். டிடிவி தினகரன் கூறியதாவது:-
தனிப்பட்ட வெறுப்பில் நான் சொல்லவில்லை, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைந்தால், அவர் நிறுத்திய வேட்பாளர்கள் தோற்றுபோய்விடுவார்கள் என 2021 தேர்தலில் நான் கூறினேன். அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள், திமுகவை எதிர்ப்பவர்கள் எல்லாரும் ஒரு அணியில் வர வேண்டும் என்று சொன்ன போது, இது எல்லாம் நடக்காது என்று. தெரிந்து தான் சொன்னேன்.. முயற்சி செய்யுங்கள் என்று சொன்னேன்.
இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என்றால்
அதே கருத்தை தான் அமித்ஷா அவர்களுக்கு இதனை எழுத்துப்பூர்வமாக எழுதியே கொடுத்தேன்.. என்னை சந்தித்த கிஷன் ரெட்டி அவர்களிடம் இதனை கொடுத்தேன். பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் நம்மால் வெற்றி பெறவே முடியாது. நாங்கள் உங்கள் கூட வந்தாலும் 100 தொகுதிகள் வேண்டும் என்றால் வெற்றி பெற முடியும் என்று கூறினேன்.
கடந்த 5 ஆண்டுகளில் பழனிசாமியின் செயல்பாடுகள், கட்சியின் தலைவராக, பொதுச்செயலாளராக அவருடைய தவறான செயல்பாடுகள்.. யாரை பார்த்தாலும் பயம்.. ஒரு தலைமைப்பண்பு என்றால் எல்லாரையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.. எந்த கட்சியில் பிரச்சனை இல்லாமல் இருக்கு?.. ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற பிறகு கூட ஜானகி அணியில் இருந்தவர்களை சேர்த்துக்கொண்டார்.
ஓபிஎஸ்ஸை சேர்த்தவர் ஜெயலலிதா
ஏன் ஓ பன்னீர்செல்வம் கூட ஜானகி அணியில் இருந்தவர் தானே.. அவரை ஜெயலலிதா சேர்க்கவில்லையா.. ஏன் முதலமைச்சர் கூட ஆக்கினாரே.. ஆர் எம் வீரப்பனையே கூப்பிட்டு இணைப் பொதுச்செயலாளர் பதவி கூட கொடுத்தார்.. இதேபோல் அம்மாவை எதிர்த்து பேசியவர்களை கூட சேர்த்தார்கள்.. அக்கா வளர்மதி, மறைந்த எம்.கே பாலன், காளியப்பன் எல்லாரையும் சேர்த்தார்கள்.
தனிப்பட்ட முறையில் பேசியவர்களை கூட, எல்லாத்தையும் புறந்தள்ளிவிட்டு எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதற்காக எல்லாரையும் சேர்த்தார். அதற்காக என்னை சேர்க்க சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். நான் எக்காரணம் கொண்டும் பழனிசாமியோடு சேர்வதற்கு வாய்ப்பே இல்லை. ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையனை எல்லாம் சேர்த்து இருக்கலாம்.
திமுக தவெக இடையே தான் போட்டி
சுயநலத்தோடு இப்படி செய்கிறார்.. கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்காமல், அவர் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு தலைவருக்கான தலைமைப்பண்பு இல்லை என எல்லாருமே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். விஜய் அவர்களது அரசியல் பயணத்திற்கு பிறகு இபிஎஸ் 3 வது இடத்திற்கே செல்வார்.
திமுக கூட்டணிக்கும் - தவெக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும். இது புது கட்சி.. அவர் கூட நான் செல்வதற்காக இப்படி பேசுகிறேன் என்று எல்லாம் இல்லை. நான் முடிவு செய்யவே இல்லை. எதார்த்தமாக ஒரு குடிமகனாக நான் சொல்கிறேன். திமுக - தவெக இடையே தான் போட்டி இருக்கும். விஜய் தலைமையிலான கூட்டணி அமைந்தால் இந்த போட்டி கடுமையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications