அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மேஜர் ஹேப்பி நியூஸ் .. நிறைவேறிய 19 வருச கனவு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
சென்னை : பள்ளிக்கல்வித் துறையில் வரும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு என்பது மாநில முன்னுரிமை நடைமுறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட், இந்த விவகாரம் தொடர்பாக முன்பு வெளியிட்ட அறிக்கையில், தொடக்கப்பள்ளிகளில், 2004ல் நேரடியாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இதுவரை பதவி உயர்வு கிடைக்கவில்லை. பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னரே, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால், அவர்கள் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

ஆனால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தனியாக பணி மற்றும் பதவி உயர்வு விதிகள் கூட உருவாக்கப்படவில்லை. முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வும் வழங்கப்படுவதில்லை. இதனால், 19 ஆண்டுகளாக எந்த பதவி உயர்வும் இல்லாமல், பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பதவி உயர்வுக்கான நடவடிக்கை எடுக்கவும், விதிகளை ஏற்படுத்தவும், உயர் நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டுள்ளது. அதை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும், மாநில முன்னுரிமை பட்டியலில் சேர்க்கவும், முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் தனி இட ஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
தற்போது பள்ளிக்கல்வித் துறையில் வரும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு என்பது மாநில முன்னுரிமை நடைமுறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதே நடைமுறையை தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பட்டதாரி ஆசிரியர்களின் இந்த கோரிக்கை முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் உத்தரப்புப்படி பள்ளிக்கல்வித் துறை சார்பில் நேற்று அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அரசாணையை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.
அதில், 'உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை இருப்பது போலவே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இனிவரும் காலங்களில் மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும் என்றும், வருகிற 31-ந்தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளததால், தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications