டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அதாவது டாஸ்மாக் நிறுவனத்தை மூடிவிட்டு அதற்கு பதில் தனியார் வசம் மதுபான விற்பனையை ஒப்படைக்கலாமா என்று முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் டாஸ்மாக் முழுவதையும் தனியார் மயமாக்க கூடிய நடவடிக்கைகள் தற்போது இல்லை என்றும் டாஸ்மாக் மூலம் பெறக்கூடிய முழு வருவாயும் தனிநபருக்கு செல்லாமல் அரசுக்கே வரும் வகையில் மாற்றங்கள் செய்ய போகிறோம் என்றும் தவெக அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய வருவாய் தருவது டாஸ்மாக் தான். சுமார் 50 ஆயிரம் கோடி வருமானம் அரசுக்கு வருகிறது. ஒரு சாதாரண 140 ரூபாய் குவாட்டர் பாட்டிலில் 128 ரூபாய் வரை வரியாக அரசுக்கு போகிறது. அந்த வரி தான் அரசின் மிகப்பெரிய வருமானமாக இருக்கிறது. அடுத்ததாகவே ஜிஎஸ்டி, சொத்து வரி, பத்திப்பதிவு, வணிக வரி போன்றவை வருகின்றன. அரசின் 2 லட்சம் கோடி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானம் டாஸ்மாக் மூலமே அரசுக்கு கிடைப்பதால், அதனை கைவிட்டு விட்டு, அரசு தனியாரிடம் ஒப்படைப்பது, விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும் சிக்கலாவே முடியும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

ஏனெனில் தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் 4,787 டாஸ்மாக் கடைகள் இருந்தன. முதல்வராக விஜய் கடந்த மே 10ம் தேதி பொறுப்பேற்றவுடன் கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகள், பார்களை மூடவேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி, 717 கடைகள் அடையாளம் காணப்பட்டு அந்த கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இதுவரை 525 கடைகள் மூடப்பட்டுவிட்டன. மீதமுள்ள கடைகள் மூடும் பணிகள் நடக்கிறது.
அரசு கடைகளை மூடினாலும் வருவாய் குறையாமல் இருக்க வேண்டும் என்றால், அரசே தொடர்ந்து டாஸ்மாக்கை நடத்தினால் தான் சாத்தியம் ஆகும். ஏனெனில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் வரி மற்றும் டெண்டர் பணம் தான் அரசுக்கு வருமானம் என்றாலும், மிகப்பெரிய அளவில் லாபம் தமிழ்நாட்டை போல் அந்த மாநிலங்களுக்கு இன்று வரை கிடைக்கவில்லை.. அந்த லாபம் தனியாருக்கே போகிறது. அதுவும் சேர்ந்து தான் தமிழநாட்டிற்கு லாபமாக கிடைக்கிறது. இப்படியான சூழலில் டாஸ்மாக்கை மூடிவிட்டு தனியார் மயம் ஆக வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
எந்தெந்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் விஜய் உத்தரவிட்ட நிலையில் மூடப்பட்ட கடைகளின் முழு விபரங்கள் 5-ந்தேதி (இன்று) நடக்கும் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட உள்ளது.
டாஸ்மாக் முழுவதையும் தனியார் மயமாக்க கூடிய நடவடிக்கைகள் தற்போது அரசிடம் இல்லை. ஆனால், டாஸ்மாக் மூலம் பெறக்கூடிய முழு வருவாயும் தனிநபருக்கு செல்லாமல் அரசுக்கே வரும் வகையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் டாஸ்மாக் நிர்வாகத்தில் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இது டாஸ்மாக் நிர்வாகத்தில் மிகப்பெரிய சீர்திருத்தமாக இருக்கும்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications