சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்தை மெஜாரிட்டி இந்துக்கள் ஏற்கின்றனர்.. வில்சன் வாதம்!
சென்னை: திமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான், அவர்கள்தான் திமுகவை ஆட்சி அமைக்க தேர்ந்தெடுத்துள்ளார்கள் என உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன் வாதிட்டார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோர், சனாதன தர்மம் குறித்து பேசியதன் அடிப்படையில், எந்த அதிகாரத்தின் கீழ் அரசுப் பதவி வகிக்கின்றனர் எனக் கேட்டு இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த கோ- வாரண்டோ மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீதிபதி அனிதா சுமந்த், ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்குமாறு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டு, தீர்ப்பை ஒத்திவைத்தார்.

முன்னதாக, இந்த வழக்கில் நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையின்போது இந்து முன்னணி மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், வர்ணாசிரமம் பிறப்பில் இல்லை என்றும், சாதி, தீண்டாமை ஆகியவை இருக்கிறது என வைத்துக்கொண்டால் அதற்கு சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென கூறமுடியாது என்றும், கண்ணில் புரை இருந்தால் அதற்கு அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். சனாதனம் குறித்து ஒரு தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்றும், சனாதனம் நாத்திகத்தையும் பேசுவதாக குறிப்பிட்டார். இந்து முன்னணி ஓர் அரசியல் கட்சி அல்ல என்றும், எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.வி.ராமானுஜம், எதிர் மனுதாரர் யாரும் தங்கள் பேச்சை மறுக்கவில்லை என்றும், அரசியல் சாசனம் வெறுப்புப் பேச்சை அங்கீகரிக்கவில்லை என்றும், பேச்சு சுதந்திரம் என்பது வெறுப்புப் பேச்சாக இருக்கக் கூடாது என்றும் கூறி, இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்ததுதான் என வாதம் வைத்தார்.
உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்தை இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். திமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான், அவர்கள்தான், கொள்கைகளின்படி நின்ற திமுகவை மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேர்ந்தெடுத்துள்ளார்கள் என வாதிட்டார்.
கொள்கை பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும், எம்.பி, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது நாடாளுமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்திற்குட்பட்டது என்பதால், அதிகாரப் பகிர்வு காரணமாக நீதிமன்றம் அதில் தலையிடக் கூடாது என வாதிட்டார். அற்ப காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை அதீத அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி வாதங்களை வைத்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அனிதா சுமந்த், இந்து முன்னணியினர் தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications