உள்ளாட்சி தேர்தலில் ம.நீ.ம தனித்துப் போட்டி.. 9 மாவட்டங்களிலும் பிரச்சாரம்: கமல்ஹாசன் அறிவிப்பு
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 9 மாவட்டங்களிலும் பரப்புரை பயணம் மேற்கொள்ளப்போவதாகவும் அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி, கமல்ஹாசனால், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி அன்று தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது. ஆனால் 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசன் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனாலும், இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் தோல்விதான் தழுவியது. ம.நீ.ம கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், பத்ம பிரியா போன்ற பிரபல வேட்பாளர்கள் திமுகவிற்கு சென்றுவிட்டனர்.

9 மாவட்டங்களில் தேர்தல்
இந்த நிலையில், 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக, அதாவது அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

நாடகம் என்றார் கமல்
2019ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, இருகட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகமே உள்ளாட்சித் தேர்தல் எனவும், உள்ளாட்சி தேர்தல் மக்கள் நலனுக்காக இருக்கப்போவதில்லை, ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே தேர்தலில் அரங்கேறும் என்றும் கூறினார் கமல்ஹாசன். 2021ல் ஆட்சியை பிடிப்பதே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு என அவர் தெரிவித்தார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன், அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர் வேண்டாம் என்று கூறுவதை போல கமல் கூறுவதாக விமர்சனங்கள் எழுந்திருந்தன. சட்டசபை தேர்தல் முடிவும் அப்படித்தான் ஆகிப்போனது.

9 மாவட்டங்களில் போட்டி
இந்த நிலையில்தான், தனது முடிவை மாற்றியுள்ளார் கமல்ஹாசன். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே. இவ்வாறு இன்று காலை கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டுள்ளார். இதற்கு வரவேற்பும், விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் கலவையாக வரத் தொடங்கியுள்ளன.

வரவேற்பு ட்வீட்கள்
தனித்து போட்டியிட எம் தலைவரை தவிர வேறு எவருக்கும் துணிவு உண்டோ.... என்று ட்வீட் செய்து கமல் அறிவிப்பை வரவேற்கிறார் ம.நீ.மவைச் சேர்ந்த இந்த நெட்டிசன்.

கிண்டல் ட்வீட்கள்
கூட்டணி வச்சாலே ஜெயிக்க முடியாது நமக்கு எதுக்கு இந்த வேல.. இப்படி சொல்லி கலாய்க்கிறார் இந்த நெட்டிசன். ஆம்.. கமல் சட்டசபை தேர்தலுக்காக வைத்திருந்த "மெகா கூட்டணி" உடைந்து விட்டதல்லவா, அதைத்தான் குறிப்பிடுகிறார்.

வேட்பாளர்கள்
சட்டமன்றத் தேர்தலுக்கே 234 பேர் புடிக்க படாத பாடு பட்டோம் நம்ம... இதுக்கு எப்படி ஆள் புடிக்க போறோம் ஆண்டவரே?
சார்ந்தோர் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! இவ்வாறு ஒரு நெட்டிசன் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications