பெரிய மூவ்.. சீனில் வரும் கமல்.. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு குறி.. சென்னையில் மநீம ஆலோசனை! வியூகம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார் படுத்தும் வகையிலும், வெற்றி வியூகம் பற்றியும் இந்த கூட்டத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என பரபரப வாதங்கள் கிளம்பிய நிலையில் தான் திடீரென்று கட்சியை துவங்கி அரசியலில் கால்பதித்தவர் தான் நடிகர் கமல் ஹாசன்.
கடந்த 2018 ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை கமல் துவங்கினார். இந்த கட்சி ஒரு சட்டசபை தேர்தல், ஒரு நாடாளுமன்ற தேர்தல் என 2 தேர்தல்களை மட்டும் சந்தித்துள்ளது.

2 தேர்தல்களில் பங்கேற்பு
இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் வெற்றியை பதிவு செய்யவில்லை. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் 2 பேரின் மனுக்கள் தள்ளுபடியான நிலையில் பிற 38 பேரும் தோல்வியடைந்தனர். அதன்பிறகு கடந்த 2021ல் தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் சார்பில் 142 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதிலும் யாரும் வெற்றி பெறவில்லை.

கமல்ஹாசனும் தோல்வி
இந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனும் களமிறங்கினார். தேர்தலில் அவர் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் களமிறங்கிய நடிகர் கமல்ஹாசன் வெறும் 1728 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் வெற்றியை பறிகொடுத்தார். 2 தேர்தல்களில் கட்சி தோல்வியடைந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சில நிர்வாகிகள் கட்சி மாறினர்.

அறிக்கையான அரசியல்
கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியடைந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடு கொஞ்சம் தடைப்பட்டு இருந்தது. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் கொஞ்சம் ஆக்டிவ்வான கட்சி அதன்பிறகும் மவுன நிலைக்கு சென்றது. நடிகர் கமல்ஹாசனும் திரைப்பட நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். அப்போது கமல்ஹாசன் கட்சி சார்பில் அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு வந்தார். சொல்லப்போனால் ட்விட்டர் அரசியலில் மட்டுமே மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்தது. அதை தவிர்த்து கட்சி சார்பில் எந்த களப்பணியும் நடக்கவில்லை. இதனால் கட்சியினர் வருத்தமடைந்தனர்.

கமல்ஹாசன் ஆலோசனை
இதற்கிடையே தான் 2024ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் திட்டமிட்டு செயல்பட துவங்கிய நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கட்ட நகர்வு என்பது இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தான் சென்னை அண்ணாநகர் தனியார் ஓட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த அந்த கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் முடிவு செய்தார். அதன்படி இன்று தனியார் ஓட்டலில் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று காலை 10 மணி முதல் ஆலோசனை துவங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் பற்றி..
இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலுக்காக கட்சியை தயார் செய்யும் வகையில் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். அதோடு நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சி சார்பில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது. இதுதவிர நிர்வாகிகளுக்காக பயிற்சி பட்டறையும் வழங்கப்பட உள்ளது. இறுதியாக இன்று மாலை 6 மணிக்கு இந்த கூட்டம் முடிவுக்கு வர உள்ளது.

நிர்வாகிகள் உற்சாகம்
இதனால் மாவட்ட செயலாளர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் இன்றைய மீட்டிங் மூலம் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் வரை உள்ள நிலையில் தற்போது கமல் ஹாசன் கட்சியின் மீது கவனம் செலுத்த துவங்கி உள்ளார். இதனால் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கமல்ஹாசன் பல்வேறு முக்கிய நகர்வுகளை மேற்கொள்வார். இது கட்சியையும், நிர்வாகிகளுக்கும் அங்கீகாரம் அளிக்கும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications