Shine Tom Chacko: தருமபுரி கார் விபத்தில் சிக்கி குட் பேட் அக்லி நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு எலும்பு முறிவு!
சென்னை: தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை மரணமடைந்தார். இந்த விபத்தில் நடிகர் ஷைனுக்கு காயங்களும் கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளன. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரளாவில் இருந்து பெங்களூருக்கு மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அவருடைய தந்தை, தாய், சகோதரர், ஓட்டுநர் ஆகியோருடன் காரில் சென்றுக் கொண்டிருந்தார். காரை கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அனீஸ் (42) என்பவர் ஓட்டிச் சென்றார்.

இன்று காலை 7 மணிக்கு தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் இவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கொம்பநாயக்கனஅள்ளி அருகே சென்றபோது பாறையூர் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி உருக்குலைந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நடிகர் ஷைனின் தந்தை சி.பி. சாக்கோ உயிரிழந்தார். நடிகர் ஷைன், தாய், சகோதரர், ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஷைனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
மலையாள நடிகரான இவர் தமிழில் "பீஸ்ட்", "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்", "குட் பேட் அக்லி" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கொச்சியில் ஒரு ஹோட்டலில் போதை பொருள் விற்பதாகக் கூறி போலீஸார் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை செய்தனர்.
அப்போது மூன்றாவது மாடியில் தங்கியிருந்த ஷைன் டாம் சாக்கோ, அங்கிருந்து தப்பியோடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து ஷைனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்பேரில் கொச்சி போலீஸாரிடம் ஷைன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அதில் இவர் கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஷைனிடம் நடத்திய விசாரணையில் இவர் ரூ 2 கோடிக்கு மேல் கஞ்சாவை வாங்கியதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து சில நாட்கள் சிறையில் இருந்த ஷைன், காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மற்றொரு சம்பவம்: மலையாள நடிகை வின்சி அலோசியஸ், கேரளாவில் நடந்த போதை பொருள் தடுப்பு நிகழ்ச்சியில் பேசுகையில், போதை பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என அவர் தெரிவித்திருந்தார். இதற்கு சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
அதற்கு அவர் பதில் கொடுக்கையில், நான் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் நடித்த போது அவர் போதை பொருள் பயன்படுத்திவிட்டு என்னிடம் தகாத முறையில் நடந்தார். மேலும் எனது ஆடையை சரி செய்ய கேரவனுக்கு சென்ற போது அவரும் என் கூடவே வந்து ஆடைகளை நான் சரி செய்து தருகிறேன் என அனைவர் முன்பும் சொன்னது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
அவருடன் ஒரு காட்சியில் நடித்த போது அவர் வாயிலிருந்து வெள்ளை நிற திரவம் ஒன்று ஒழுகியது என நடிகரின் பெயரை சொல்லாமல் சொன்னார். இதனால் யார் அந்த நடிகர் என சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில்தான் நடிகை வின்சி, நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட வர்த்தக சபை ஆகியவையிடம் புகார் அளித்தார்.
போதை பொருள் வழக்கில் கைது, நடிகையிடம் தகாத முறையில் நடந்தது என சர்ச்சையில் சிக்கிய ஷைன் டாம் சாம்கோ, தற்போது விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஷைன், மருத்துவமனையில் வேறொரு படுக்கையில் இருக்கும் தனது தாயை பார்த்து ஷைன் கண்ணீர் விட்ட சம்பவம் பார்ப்போர் மனதை உலுக்கியது.












Click it and Unblock the Notifications