பரதநாட்டியம்..தப்பாட்டம்..மாமல்லபுரத்தில் நாட்டிய விழா..அசத்தல் ஏற்பாடுகள்..அமைச்சர் ராமச்சந்திரன்
சென்னை: மாமல்லபுரம், தீவுத்திடலில் நாட்டிய விழா டிசம்பர் 23 முதல் ஜனவரி 12 வரை நடைபெறுகிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம், இந்தியாவின் கிராமிய பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது என கூறினார். மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவை 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. ஆண்டு இறுதியில் இங்கு குவியும் சர்வதேச பயணியர் இந்திய கலைகளை ரசிக்க விரும்புகின்றனர். மகாபலிபுரம் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது மாமல்லபுரத்து குகைக் கோவில் சிற்பங்கள். மகேந்திர வர்மன் மற்றும் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கற்சிற்பங்கள், குகைக் கோயில்கள், ஒற்றைக்கல் ரதம் மற்றும் கடற்கரை கோவில் ஆகியவை மாமல்லபுரத்தின் சிறப்பம்சங்களாகும்.

மாமல்லபுரத்து சிற்பங்கள் புராண கதைகள், இதிகாச போர்கள், அர்ஜூனன் தவம், மற்றும் யானைகள் உள்ளது உள்ளபடி தத்ரூபமாக உலக சுற்றுலா பயணிகள் வியக்கும் வண்ணம் அமைந்துள்ளன. மக்கள் அனைவரும் பார்த்து வியக்கும் மகிஷாசுரமர்த்தினி சிற்பம் இங்கு அமைந்து உள்ளது. இந்த சிற்பங்களை கண்டு ரசிக்க உலகம் முழுவதிலுமிருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வருடம் முழுவதும் மாமல்லபுரத்திற்கு வந்து செல்கின்றனர்.
கிபி ஏழாம் நூற்றாண்டு காஞ்சியில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் இவ்வூரின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தனர். முதலாம் நரசிம்மவர்மன் கிபி 630 - 668 என்ற பல்லவ மன்னன் காலத்தில் இத்துறைமுகம் சிறப்புற்று இருந்தது. நரசிம்மவர்மனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று 'மாமல்லன்' என்பதாகும். துறைமுக பட்டினத்திற்கு நரசிம்மவர்மனின் சிறப்பு பெயர் வழங்கப்பட்டு 'மாமல்லபுரம்' என அழைக்கப்படலாயிற்று. 'கடல் மல்லை', ' மாமல்லை' ஆக மாறி மாமல்லபுரம் என அழைக்கப்படுகிறது.
மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் இந்திய நாட்டிய விழா, வரும் 23 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து உணவுத் திருவிழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நாட்டிய நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பாரத நாட்டியம், குச்சிப்புடி, கதக், மோகினியாட்டம், தப்பாட்டம் ஒடிசி மற்றும் கதகளி போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களும் இடம்பெற உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் விழா ஏற்பாடுகள் நடைப்பெற்று வருவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications