சென்னையில் ஒரே போன் கால் தான்.. பூந்தமல்லி ஆசிரியைக்கு 38 லட்சம் அவுட்.. மிரள வைத்த கேடித்தனம்
சென்னை: சென்னை பூந்தமல்லியை அடுத்த வேலப்பன்சாவடியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற பேராசிரியை ஜெனட் டெய்சியை மும்பை சைபர் கிரைம் போலீஸில் இருந்து பேசுவதாக கூறியிருக்கிறார் மர்ம நபர் ஒருவர். அவர் மிரட்டும்தொனியில் பேசியதுடன், உங்கள் பெயரில் சிம் கார்டு வாங்கி சமூக விரோத செயல்கள் நடந்துள்ளது என்று பேசியிருக்கிறார். அப்படியே ஒரே போன் காலில் மிரட்டி 38 லட்சம் பணத்தை பறித்துள்ளார். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இன்றைய சூழலில் சில நொடிகளில் ஜிபேவை ஹேக் செய்தாலே லட்சக்கணக்கில் பணத்தை திருடிவிட முடியும். வங்கி கணக்கை ஹேக் செய்தால் மொத்தமாக பணத்தை திருடிவிட முடியும். டிஜிட்டல் திருடர்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய உத்திகளை கையாண்டு ஏமாற்றி வருகிறார்கள். அப்படி ஏமாற்றும் வழிகளை ஒவ்வொரு முறையும் கண்டுபிடித்து அதனை அடைத்து வருகிறார்கள் சைபர் கிரைம் போலீசார். எல்லா வங்கிகளுமே ஓடிபி, பாஸ்வேர்டு, ஆதார் உள்ளிட்ட தகவல்களை யாருக்கும் தர வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி வருகிறார்கள்.

இதனால் புதிய உத்திகளை டிஜிட்டல் திருடர்கள் கையாண்டு வருகிறார்கள். அதில் ஒன்று தான் சைபர் கிரைம் போலீஸ். சைபர் கிரைம் போலீஸ் பெயரில் பேசி, அவர்களை அச்சுறுத்தி மிரட்டி பணம் பறிக்கிறார்கள். டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில் அதிக அளவில் மோசடி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே ஏராளமானோர் பணத்தை பறிகொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் வசிப்பவர் ஜெனட் டெய்சி (வயது 62). ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியையான இவரை கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதி செல்போனில் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் சைபர் கிரைம் அதிகாரி என்று பேசிய நபர் "நாங்கள் மும்பை சைபர் கிரைம் போலீஸ், உங்கள் பெயரில் சிம் கார்டு வாங்கப்பட்டிருக்கிறது. அந்த சிம் கார்டு மூலம் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெற்றுள்ளது. எனவே நீங்கள் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
அதனை ஆர்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் முறையானது தானா? அல்லது மோசடியான பணமா? என்பதை உடனே கண்டுபிடிப்பார்கள். நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் உங்களது பணத்தை அனுப்ப வேண்டும்" என்று மிரட்டியிருக்கிறார்கள்.
இதனால் பயந்துபோன ஜெனட் டெய்சி, மர்மநபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு சிறிது சிறிதாக மொத்தம் ரூ.38 லட்சத்து 16 ஆயிரத்து 971 பணத்தை அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன்பிறகு அந்த நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகுதான் மர்மநபர்கள் நூதன முறையில் தன்னிடம் பல லட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டதை டெய்சி அறிந்தார். இதுபற்றி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஓய்வு பெற்ற பேராசிரியை ஜெனட் டெய்சி புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆவடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த மோசடி தொடர்பாக சென்னை அண்ணாநகர் பகுதியில் பதுங்கி இருந்த பிஜாய் (33) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் பிஜாய், 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வந்திருக்கிறார். பின்னர் ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் நபர்களுடன் கூட்டு சேர்ந்து பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுமக்களை ஏமாற்ற 13 வங்கிகளில் கணக்குகளை தொடங்கி அதில் சி.பி.ஐ. அதிகாரி, மும்பை சைபர் கிரைம் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று மிரட்டியும், ஆன்லைன் ஷேர் டிரேடிங் மற்றும் பகுதிநேர வேலை என்ற பெயர்களில் பொதுமக்களை ஏமாற்றி பெறப்படும் பணத்தை காசோலை மூலம் பெற்று வெளிநாடுகளில் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றம் செய்து மோசடி செய்திருப்பதை கண்டுபிடித்தனர்.
மோசடி செயலுக்காக பயன்படுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் இந்தியா முழுவதும் 135 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருப்து தெரிய வந்தது. பின்னர் கைதான அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து செல்போன், லேப்டாப், டெபிட் கார்டு, வெல்கம் கிட், பாஸ்புக் மற்றும் செக்புக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications