விஜய் உடன் கூட்டு.. “காங்கிரஸின் ஒழுக்கக்கேடான செயல் இது!” - மணிசங்கர் அய்யர் கண்டனம்
சென்னை: விஜய் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக, திமுகவை விட்டுவிட்டு தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது ஒழுக்கக்கேடான செயல் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் விமர்சித்திருக்கிறார்.
திமுக-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்துவிட்டு, முடிவுகள் வந்த சில நாட்களிலேயே அந்தக் கூட்டணியை முறித்துக் கொண்டு விஜய்யின் தவெக-விற்கு ஆதரவு அளிப்பதை மணிசங்கர் ஐயர் மன்னிக்க முடியாத துரோகம் என விமர்சித்திருக்கிறார்.

காந்தியின் தார்மீக நெறிகளுக்கு இது எதிரானது என்றும், காங்கிரஸ் தனது கௌரவத்தை ஒரு சில அமைச்சர் பதவிகளுக்காக அடமானம் வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். விஜய்யின் தவெக ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதை அவர் ஏற்றுக்கொண்டாலும், காங்கிரஸின் இந்த திடீர் கட்சித் தாவல் தமிழக அரசியலில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கும் என அவர் அஞ்சுகிறார்.
இந்த அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, தமிழகத்திற்குள் பாஜக கொல்லைப்புறம் வழியாக நுழைவதற்கு காங்கிரஸ் வழிவகுத்துக் கொடுத்துவிட்டது என்றும் கவலை தெரிவித்திருக்கிறார்.
தனது முன்னாள் நாடாளுமன்றத் தொகுதியான மயிலாடுதுறையை உதாரணமாகக் காட்டி அவர் ஒரு முக்கியமான வாதத்தை முன்வைக்கிறார். அதாவது, மயிலாடுதுறைக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 5 தொகுதிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளன. மக்கள் தவெக-விற்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். அப்படியிருக்கையில், வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கு மாறாக காங்கிரஸ் தவெக-வுடன் இணைவது ஜனநாயக விரோதம் என்கிறார்.
'இந்தியா' கூட்டணியிலேயே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முதலில் முன்மொழிந்தவர் மு.க. ஸ்டாலின் என்பதை நினைவுபடுத்தும் மணிசங்கர், தன்னை மூழ்கடித்தவருடன் (விஜய்) கரையைச் சேர நினைக்கும் காங்கிரஸ், தம்மோடு இவ்வளவு காலம் நின்ற ஒருவரை (ஸ்டாலின்) அவர் மூழ்கும் போது கைவிடுவது முறையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், விஜய் ஒரு சிறந்த நடனக் கலைஞர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவரது அரசியல் ஆயுள் மற்றும் நிலைத்தன்மை குறித்து இன்னும் தெரியாத நிலையில், அவசரப்பட்டு அவருடன் கைக்கோர்ப்பது காங்கிரஸின் எதிர்காலத்தையே பாதிக்கும். இனி யாராவது காங்கிரஸை நம்புவார்களா? என்றும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் இம்முடிவு சாதுரிய அரசியல் எனவும், காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்கள் இதை ஆசீர்வதிக்க மாட்டார்கள் எனவும் மணிசங்கர் குறிப்பிட்டார். திமுகவுடன் இணைந்து போராடிய தேர்தலுக்குப் பிறகு, உடனடியாக டிவிகேவுடன் கூட்டணி அமைப்பது வருந்தத்தக்கது என பிடிஐ செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இது மகாத்மா காந்தியின் 1925 'சுயராஜ்யம் தார்மீக அடிப்படையில் அமைந்த அரசு' என்ற கூற்றை மீறுவதாகும் என்றும் விமர்சித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications