ஜூஸில் விஷம் கலக்கப்பட்டதா? குடித்ததுமே மயக்கம்.. விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்ட மன்சூர் அலிகான்!
சென்னை: கட்டாயப்படுத்தி ஜூஸ், மோர் கொடுத்ததாகவும், அதை குடித்ததுமே மயக்கம் வருவது போல் ஆகி, நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்டதாகவும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. மேலும் ஏராளமானோர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் களமிறங்கியுள்ளனர். நடிகர் மன்சூர் அலிகான் தான் வேலூரில் போட்டியிடுவதாக அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாளிலேயே முதல் ஆளாக வேலூர் தொகுதிக்கான வேட்பு மனுவை மன்சூர் அலிகான் தாக்கல் செய்திருந்தார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்தாலும், அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பலாப்பழம் சின்னத்தில் வாக்கு கேட்டு வேலூர் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார் மன்சூர் அலிகான். நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று காலையில் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் மன்சூர் அலிகான்.
மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, குடியாத்தம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை 6 மணி அளவில் மன்சூர் அலிகான் மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மன்சூர் அலிகான் உடல்நிலை குணமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தற்போது அறிக்கையொன்று விடுத்துள்ளார். தனது பி.ஆர்.ஓ மூலமாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் மன்சூர் அலிகான்.
அதில், "நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி வரும்போது ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க... குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி... உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, ட்ரீட்மெண்ட் குடுத்தும் வலி நிக்கல.
அப்புறம் சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக ட்ரிப்ஸ் கொடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications