வெயில் பிரச்சினை இனி குறையும்! மொத்தம் 13 மாவட்டங்களில் காத்திருக்கு கனமழை.. வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களாகவே கோடைக் காலம் காரணமாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இப்போது கோடைக் காலம் முடிந்துள்ள நிலையில், வெப்பம் மெல்லக் குறைந்து வருகிறது
இந்நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக இடங்களில் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 மாவட்டங்களில் மழை
ஆந்திரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஜூன் 6) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் நாட்கள்
நாளை (ஜூன் 7) முதல் அடுத்த 4 நாட்களுக்குத் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை வல்லம் பகுதியில் 90 மிமீ, பெரம்பலூர், அதிராம்பட்டினம் பகுதிகளில் 70 மிமீ மழையும் பெய்துள்ளது.

சென்னை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எச்சரிக்கை
நாளை மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 8 முதல் 10 வரை வடக்கு கேரளா - கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications