மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு- சென்னையில் ஆந்திரா குறும்பட இயக்குநர் வீட்டில் NIA அதிரடி சோதனை!
சென்னை: தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னை கொளத்தூரில் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடையவர்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இலங்கை இயக்கங்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், முருகன் உள்ளிட்டோர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிப்ரவரி 2-ந் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் லேப்டாப்கள், புத்தகங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், நாம் தமிழர் கட்சியினர் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை அவர்களை கண்காணிக்கவிலை. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து சோதனை நடத்தினர். அடுத்ததாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சென்னை கொளத்தூர் பகுதியில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை கொளத்தூரில் முகில் சந்திரா என்பவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட முகில் சந்திரா, சென்னையில் தங்கி உள்ளார். இவர் குறும்பட இயக்குநர். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் இயக்கத்துடன் முகில் சந்திராவுக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஜனநாயக அரசுகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை கொள்கையாக கொண்டது மாவோயிஸ்ட் இயக்கம். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் இயக்கத்தினர் ஒடிஷா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் வனப்பகுதிகளில் தலைமறைவாக இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சத்தீஸ்கரில் அண்மையில் அதிகமான தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் நடத்தி இருந்தனர். அம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications