Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் கட்சியில் சேர துண்டு போடும் மாஜி அதிமுக புள்ளி..? “ஜெயலலிதாவின் மனசாட்சி” யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் மனசாட்சியாகத் திகழ்ந்து, அவருக்கு உரைகள் தயாரித்துக் கொடுத்த மருது அழகுராஜ், தமிழக வெற்றிக் கழகத்தில் துண்டு போட்டுக் காத்திருப்பதை அவரது சமீபத்திய பதிவுகள் வெளிக்காட்டுகின்றன. ஓபிஎஸ் அணியில் இருந்து வந்த மருது அழகுராஜின் அண்மைக்கால பதிவுகள் விஜய் பக்கம் அவர் சாய்ந்திருப்பதையே காட்டுகின்றன.

தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகி விட்டார். மாவட்டம் தோறும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ், விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

Vijay TVK Marudhu Alaguraj

விஜய் பற்றி மருது அழகுராஜ்

மருது அழகுராஜ் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

புரட்சித் தலைவரை "வாத்யாரே" என்றும்
புரட்சித் தலைவியை "அம்மா" என்றும்
அழைத்து நெகிழ்ந்து மகிழ்ந்த
ஏழை எளிய சனங்கள்

விஜய்யை "அண்ணா வா"
அன்னைத் தமிழ் மண்ணை
" ஆள வா" என
அழைக்கும்
காலம் தொடங்கி விட்டது.." எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒரு பதிவில்,
"தொடர்ந்து தோற்றும்
பல போட்டிகளில் பங்கேற்க கூட திராணியின்றி
கரை ஒதுங்கி கிடக்கும்
ஓட்டைப் படகு...

குழுக்கள் பல சேர்ந்து
தள்ளித் தள்ளியே
கரைசேர்க்கும்
கணக்கோடு
ஒரு குடும்பப் படகு...

புத்தம் புதிதாக
இள ரத்தங்களோடு
துள்ளிப்பாய்ந்திட
ஆயத்தமாகும்
ஒரு வெற்றிப்படகு

என
முதுமைக்கும்
இளமையிலான
புதுமைக்குமான
போட்டியாக
2026 அமையுமோ?" என விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை சூசகமாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் மருது அழகுராஜ்.

மேலும், "நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள். பாரத தேசத்தை மாற்றிக்காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர்.. இன்று ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள் திராவிட அரசியலை மாற்றிக் காட்டிட.. தடுப்பதற்கு வழி தெரியாமல் கூட்டணி ஊன்றுகோலால் தங்களை தக்க வைக்க கையேந்தி பவன்களாக கழகங்கள்.." என ஒரு பதிவில் தெரிவித்துள்ளார் மருது அழகுராஜ்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து வந்த மருது அழகுராஜ், அண்மைக்காலமாக தவெக-வை புகழ்ந்து பதிவிட்டு வருவது, அவர் அக்கட்சியில் இணைய விரும்புவதையே காட்டுவதாக தெரிகிறது. விரைவில் அவர் விஜய்யை சந்தித்து கட்சியில் இணைந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

யார் இந்த மருது அழகுராஜ்?

தேமுதிக, சமக ஆகிய கட்சிகளில் இருந்த மருது அழகுராஜ் 2008 முதல் அதிமுகவில் இருந்து வரும் நிலையில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே திருப்பத்தூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிருக்கிறார் மருது அழகுராஜ்.

அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பு வகித்த ஜெயலலிதா தொடங்கி முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் வரை பேசிய பிரபலமான பேச்சுகளுக்கு உரை எழுதிக் கொடுத்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதாவின் புகழ்பெற்ற பிரச்சார உரைகள் மட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமி அமைச்சரான பிறகு முதல் மானியக் கோரிக்கை பேச்சையும், சசிகலாவின் முதல் அறிக்கையையும், உரையையும் எழுதிக் கொடுத்தவர் மருது அழகுராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay TVK Marudhu Alaguraj

நமது எம்.ஜி.ஆர் ஆசிரியர்

அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த மருது அழகுராஜ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது எம்.ஜிஆர்' ஆசிரியராக இருந்தவர். பல ஆண்டுகாலமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உரை, அறிக்கைகள் எழுதிக் கொடுத்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதாவின் பல புகழ்பெற்ற பேச்சுகளுக்குப் பின்னணிக் குரலாக இருந்தவர். "மோடியா லேடியா?, மக்களால் நான் மக்களுக்காகவே நான்" ஆகிய ஜெயலலிதாவின் முழக்கங்களை உருவாக்கி பிரசார மேடைகளை அதிரவிட்டவர் மருது அழகுராஜ்.

சித்ரகுப்தன் எனும் பெயரில் நமது எம்ஜிஆரில் மருது அழகுராஜ் எழுதும் கட்டுரைகள், கவிதைகள் மிகவும் பிரபலம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு, சசிகலா தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்த 'நமது எம்.ஜி.ஆர்'நாளேட்டின் ஆசிரியராகத் தொடர்ந்தார் மருது அழகுராஜ். அரசியலின் திரைமறைவில் பெரும் அதிகாரத்தோடு இருந்த சசிகலா, முன்வரிசைக்கு வந்தபோது, சசிகலாவின் முதல் அறிக்கை, முதல் உரையை எழுதிக் கொடுத்தவர் மருது அழகுராஜ். அந்தவகையில், சசிகலாவின் அரசியல் பிரவேசத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்களில் ஒருவர் இவர்.

Vijay TVK Marudhu Alaguraj

நமது அம்மா

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இரட்டைத் தலைமையின் கீழ் இயங்கிய அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வ நாளிதழ் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி 2018ஆம் ஆண்டு 'நமது அம்மா' எனும் பெயரில் தொடங்கப்பட்டது. இந்த நாளிதழின் ஆசிரியராக மருது அழகுராஜ் நியமிக்கப்பட்டார்.

'நமது அம்மா' நாளிதழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2022 ஜூன் மாதம் ஓபிஎஸ், எடப்பாடி தரப்பால் ஓரங்கட்டப்பட்டு, நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பின் செயல்களால் அதிருப்தி அடைந்து நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டார் மருது அழகுராஜ். அதன் பிறகு, ஓபிஎஸ் அணியில் இருந்து அவர் கடுமையாக எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், அவர் திடீரென விஜய் புகழ் பாடத் தொடங்கியுள்ளார். இதன் மூலம், மருது அழகுராஜ், விஜய் கட்சியில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் பிரபலமான முழக்கங்களுக்கு பின்னால் இருந்த மருது அழகுராஜ், விஜய்க்கும் உதவக்கூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+