“வஞ்சம்”.. தமிழகத்துக்கு மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்கனும்! சென்னையில் நாளை சிபிஎம் போராட்டம்
சென்னை: மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது கொண்டு உள்ள வஞ்சப் போக்கை கைவிட்டு தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாளை சென்னையில் முற்றுகை போராட்டத்தை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செய்தியாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கனவே பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு வழங்கி வரும் நிலையில் தற்போது கூடுதலாக தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ. 1000 கோடி நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

ஒன்றிய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பாராட்டுக்குரியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு இதனை வரவேற்கிறது. மிக்ஜம் புயலால் சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன. இந்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குள் தென்மாவட்டங்களில் பெய்த அதி கனமழையின் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகின.
அனைத்தையும் இழந்து மக்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பேருதவியாக அமைந்தன. ஒன்றிய அரசு, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதல் நிதி ஒதுக்கும் பட்சத்தில் நிவாரண உதவிகளை, உதவித் தொகைகளை மேலும் அதிகரித்திட ஏற்படும்.
ஒரு ரூபாய் கூட ஒதுக்காத மோடி அரசு: தமிழக முதலமைச்சர், பிரதமரை நேரில் சந்தித்து வெள்ளப்பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் மறு கட்ட மைப்பு பணிகளை சீர் செய்திட ரூ. 21 ஆயிரம் கோடி தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஒதுக்கிட வேண்டுமென வலியுறுத்தினார். ஆனால், இதுகாறும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சித்து வருகிறது.
ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழகத்தின் மீது கொண்டுள்ள வஞ்சகப் போக்கை கைவிட்டு, வெள்ளப் பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.21 ஆயிரம் கோடி நிதியினை உடனடியாக வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஜனவரி 3 அன்று சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு நடைபெறும் முற்றுகைப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பு மக்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications