"விட்றாதீங்க".. 1000 ரூபாய் வாங்கறதுக்கு.. இந்த ரேசன் கார்டு இருந்தால் போதுமாம்.. வெளியான தகவல்கள்
பெண்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய், எப்போது வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்
சென்னை: மகளிர் தினத்தையொட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. அதுமட்டுமல்ல, வருகிற பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம் என்ற அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.. இதையடுத்து, யாரெல்லாம் ரூ.1000 பெற முடியும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தபோது, முக்கிய தகவல் ஒன்றை அறிவித்திருந்தார்.
இதே இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்தபோது, திமுக அரசின் குறைகளை எல்லாம் லிஸ்ட் போட்டு பேசினால், முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் சாதனைகளை லிஸ்ட் போட்டு சொன்னதுடன், மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்தும் பேசினார்..

காலி கஜானா
"கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. இன்னும் 3 ஆண்டு கால ஆட்சி மிச்சம் இருக்கிறது. அதுக்குள்ளே, சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம். இன்னொரு முக்கியமான வாக்குறுதி ஒன்று இருக்கிறது.. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். அதுதான் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சி காலத்தில் கஜானாவை காலி செய்து விட்டு கடன் வைத்து விட்டு போய் விட்டார்கள். அதை படிப்படியாக சரி நாங்கள் செய்து வருகிறோம்... எப்படியும், வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். ஏனென்றால், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நான் சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று கூறியிருந்தார்.

கருணாநிதி மகன்
மகளிருக்கான 1000 ரூபாய் எப்போது தரப்படும் என்ற கேள்வி கடந்த ஒன்றரை வருட காலமாகவே எழுந்து வரும்நிலையில், பட்ஜெட்டில் இந்த 1000 ரூபாய் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக முதல்வர் ஸ்டாலினே சொல்லியிருந்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்துவருகிறது.. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதே அறிவிப்பை தற்போது உறுதி செய்துள்ளார்.. மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள முதல்வர், வருகிற பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம் என்று மறுபடியும் உறுதிபட கூறியுள்ளார்.

1000 ரூபாய்
குறிப்பாக, "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில், குடும்பத்தலைவர்களாக உள்ள பெண்களுக்குக் கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது, முக்கியப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை பெண்களுக்கு வழங்குவது எனப் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல சீரிய திட்டங்களை நமது அரசு செயல்படுத்த எண்ணியுள்ளது என்பதையும் இந்த மகளிர் நாள் செய்தியில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்... அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்" என்று முதல்வர் தன்னுடைய வாழ்த்து செய்தியில் அறிவித்திருக்கிறார்.

லாஸ்ட் கட்டம்
பட்ஜெட்டில் 1000 ரூபாய் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியானாலும்கூட, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன்3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. எப்படி பார்த்தாலும், இதற்கான திட்டங்கள் இறுதிப்பணியை எட்டியுள்ளனவாம்.. இடைத்தேர்தல் பணிக்காக, முக்கிய அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டிருந்த நிலையில், மீண்டும் இதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன.. அதேசமயம், இந்த 1000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்? இந்த உரிமைத்தொகையை வாங்க யாரெல்லாம் தகுதியானவர்கள்? என்கிற சந்தேகங்களும் மக்களிடையே வலம் வந்து கொண்டேயிருக்கின்றன.

PHH + PHAAY
அதன்படி PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும். அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. மேலும், புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது.

பூரிப்பு நியூஸ்
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ரேசன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை என்கிறார்கள்.. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது.. அதேபோல, 60 வயதுக்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் கூறப்படுகிறது.. ஆக மொத்தம், 1000 ரூபாய் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கான உறுதியை மகளிர் தின வாழ்த்தில் மீண்டும் தந்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications