அடுப்பே பற்ற வைக்காமல் தோசை சுட்ட ஜெயக்குமார்.. ஒரே ஆரவாரம்.. பூரித்த கடைக்கார பெண்.. இதாங்க ட்ரெண்ட்

ஜெயக்குமார் அடுப்பு பற்ற வைக்காமல் தோசை சுட்ட வீடியோ இணையத்தில் மீண்டும் ஷேர் ஆகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுப்பையே பற்ற வைக்காமல், நம்ம ஜெயக்குமார் தோசை சுட்டாரே ஞாபகம் இருக்கா? மாஜி அமைச்சரின் அந்த வாக்குசேகரிப்பு வீடியோதான் இணையத்தில் இப்போது மறுபடியும் ட்ரெண்டாகி வருகிறது.

வழக்கமாக தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகள் பல்வேறு விதமான பிரச்சார வியூகங்களை கையில் எடுக்கும்.. அதில் முக்கியமானது திண்ணை பிரச்சாரம் ஆகும்.

மக்களை நேரடியாக சந்தித்தும், நெருங்கி பேசியும் வாக்குகளை சேகரிப்பது கட்சி தலைவர்களின் வழக்கம்.. இன்னும் ஒருபடி மேலே சென்று, தொகுதி மக்களிடம் அன்னியோன்யத்தை வளர்த்து கொள்வதற்காக, அவர்களுக்கு உதவிகளையும் செய்து தந்து வருகிறார்கள்.

 தெம்பு

தெம்பு

இப்படி உதவிகளை செய்வதற்கு எந்தவித தயக்கமும், சங்கோஜமும் தலைவர்களுக்கு இருப்பதில்லை.. மாறாக, இப்படியான உதவிகள், தலைவர்களின் மீதான நன்மதிப்பை பெற்று தருவதுடன், அவர்களுக்கான ஆதரவையும் பெருக்கி தருகிறது.. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.. இரட்டை இலை கிடைத்த தெம்புடன் அதிமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேற்கொண்ட பிரச்சாரங்கள் தற்போது இணையத்தில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது.. எப்போதுமே ஜெயக்குமார் பிரச்சாரம் செய்கிறார் என்றாலே, அந்த தொகுதி மக்கள் குதூகலமாகிவிடுவார்கள்.

 தைத்த துணி

தைத்த துணி

இப்படித்தான், நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்காக ஜெயக்குமார் சென்னையில் சில பகுதிகளுக்கு சென்றிருந்தார்.. அப்போது ஒரு வீட்டிற்குள் வாக்கு கேட்க ஆதரவாளர்களுடன் நுழைந்தார் ஜெயக்குமார்.. அங்கு பெண்மணி ஒருவர் டைலரிங் மிஷினில் துணி தைத்து கொண்டிருப்பதை பார்த்த ஜெயக்குமாரும், அந்த மிஷினில் உட்கார்ந்து, அதே துணியை தைத்தார்.. தைத்து முடித்ததும் "எப்படி?" என்று அங்கிருந்தோரை பார்த்து கேட்டார்.. அவர்கள் அனைவரும் கைகளை தட்டி, சூப்பர்ண்ணே என்றார்கள்.. இதேபோல் கடைதெருவில் நடந்து வந்து கொண்டிருந்த ஜெயக்குமார், அங்கிருந்த மட்டன் கடைக்குள் நுழைந்துவிட்டார்..

 கறிக்கடை ஜெயக்குமார்

கறிக்கடை ஜெயக்குமார்

அரிவாளை எடுத்து மட்டனை துண்டு துண்டாக வெட்டினார்.. ஆனால், அந்த மட்டன் ஏற்கனவே சிறு துண்டுகளாக வெட்டப்பட்டுதான் இருந்தது.. அதில் இருக்கும் நாலைந்து துண்டுகளை எடுத்து, இவர் இன்னும் சிறிய துண்டாக வெட்டினார்.. கறி வெட்ட வந்த ஜெயக்குமாருக்கு அந்த பகுதியில் உள்ள பெண்கள், ஆரத்தி எடுத்து அமோகமாக வரவேற்றிருந்தனர்.. இதெல்லாம் வீடியோவாக மீடியாவில் வெளியாகியிருந்தது.. இந்த பிரச்சாரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, ஜெயக்குமார் சுட்ட தோசைதான்..

தள்ளுவண்டி

தள்ளுவண்டி

இட்லி, தோசை விற்கப்படும் ஒரு தள்ளுவண்டி கடைக்கு ஜெயக்குமார் அப்போது வாக்கு சேகரிக்க சென்றார்.. ஆனால், ஜெயக்குமார் சென்றநேரம், கடையில் இட்லி, தோசை விற்று முடிக்கப்பட்டிருந்தது.. அதனால், பக்கெட்டுகளில் சாம்பார், சட்னி, இட்லி மாவு போன்றவை மிச்சம் இருந்தன. அந்த தள்ளுவண்டி கடையில் சாப்பிடுவதற்கு ஆட்களும் யாரும் இல்லை.. இருந்தாலும் தள்ளுவண்டி முன்பு நின்றுகொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார்.. அந்த டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த சாம்பார் அண்டாவை திறந்து பார்த்தார்.. பிறகு அடுப்பு மேல வைக்கப்பட்டிருந்த தோசை கல்லை பார்த்தார்.. மாவு இல்லாமலேயே வெறும் கரண்டியால் அந்த கல்லில் திருப்பி திருப்பி போட்டார்..

 தீக்குச்சி

தீக்குச்சி

அதற்கு பிறகு, ஒரு தீப்பெட்டியை கொண்டுவந்து ஜெயக்குமாரிடம் தந்தார்கள்.. அதை வாங்கி அந்த அடுப்பை பற்ற வைக்க முயன்றார் ஜெயக்குமார்.. ஆனால், தீக்குச்சிதான் முழுவதும் எரிந்ததே தவிர, அடுப்பு எரியவில்லை.. காற்றில் தீக்குச்சி அணைந்துவிட்டது.. இதை பார்த்ததும் ஜெயக்குமார் சிரித்துவிட்டார்.. உடனே அந்த கடைக்கார பெண், ஜெயக்குமார் பக்கத்தில் நின்று கொண்டு, "இந்தா, முதல்ல இந்த மாவை எடுத்து அதுல ஊத்து.. அடுப்பு எரியறதை அப்பறம் பார்த்துக்கலாம்.. கரண்டி பிடிச்சி இப்படியும், அப்படியும் திருப்பி விடு" என்றார்..

 மாவு கரண்டி

மாவு கரண்டி

அந்தம்மா அப்படி சொன்னதுமே, ஒரு கரண்டி மாவு எடுத்து, கல்லில் ஊற்றினார் ஜெயக்குமார்.. உடனே அங்கிருந்தவர்கள் ஹேய் என்று சத்தம்போட்டு ஆரவாரம் செய்தார்கள்.. சும்மா பெயரளவுக்கு மாவை எடுத்து ஊத்துவார் என்று பார்த்தால், 2வது கரண்டியும் மாவை எடுத்து, ரவுண்டாக தேய்த்து விட்டார் ஜெயக்குமார். உடனே அங்கிருந்தவர்களிடம் ஓகே என்று கேட்கவும், சுற்றியிருந்தவர்கள் கைகளை தட்டி விசில் அடிக்கவும், ஜெயக்குமாருக்கு முகமெல்லாம் ஒரே சிரிப்பு.. கைகளை கூப்பி எல்லாருக்கும் ஒரு வணக்கம் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.. அடுப்பையே பற்ற வைக்காமல் ஜெயக்குமார் தோசை சுட்ட வீடியோ இணையத்தில் வைரலானது..

 தோசை சுடறேன்

தோசை சுடறேன்

அடுப்பே பற்ற வைக்காமல் தோசை சுட்டது பற்றி ஜெயக்குமாரிடம் அடுத்தநாளே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு ஜெயக்குமார், "நான் என்ன தொழில் ரீதியாக தோசை சுடுபவனா? அப்படி தோசை சுட்டால்தான், கீழ்மட்டத்தில் இருக்கும் எல்லாருக்கும் போய் சேரும்.. எங்கள் கழகம் ஒரு பாட்டாளி கட்சி.. அதனால், பாமர மக்களுடன் இணையும் வகையில் அதைச் செய்தேன்.. யாரெல்லாம் என்னை கிண்டல் செய்கிறார்களோ, அவங்க அட்ரஸை மட்டும் எனக்கு குடுங்க. நான் தோசை சுட்டு அவங்களுக்கு அனுப்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

 ஜிலேபி திமுக

ஜிலேபி திமுக

இது பழைய சம்பவம் என்றாலும், இப்போது நெட்டிசன்கள் இந்த வீடியோவை மறுபடியும் வைரலாக்கி வருகிறார்கள்.. இப்படியெல்லாம் தோசை சுட்ட ஜெயக்குமார், 2 நாளைக்கு முன்பு செய்தியாளர்களிடம் என்ன பேசினார் தெரியுமா? "ஈரோட்டில் ஒரு திமுக எம்எல்ஏ ஒட்டகத்தில் போய் வாக்கு கேட்கிறார். அது சட்டப்படி தவறு.. அவரை விலங்கின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இந்த திமுகவினர் பரோட்டா, டீ , ஜிலேபி போட்டுத்தந்து கோமாளித்தனமாக வாக்கு சேகரிக்கிறார்கள்.. மலிவான செயல்களை செய்யும் இவர்களை மக்கள் சவுக்கடி கொடுப்பார்கள். திருமங்கலம் பாஃர்முலாவை விட புது பாஃர்முலாவா இதெல்லாம் இருக்கே" என்று ஜெயக்குமார் கூறியிருந்ததை நாம் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+