அடேங்கப்பா.. காஞ்சியை அதிரவைத்த அதிமுக பொதுக்கூட்டம்.. திரண்ட தொண்டர்கள்.. கெத்து காட்டிய எடப்பாடி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காஞ்சிபுரத்தில், அதிமுக-வின் 53வது ஆண்டு தொடக்க நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (அக்டோபர் 26) இரவு நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டதால் காஞ்சிபுரமே அதிர்ந்துள்ளது.
அதிமுக-வின் 53வது ஆண்டு தொடக்க நாள் விழாவை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 17 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் பெய்த கனமழை காரணமாக இந்தப் பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று (அக்டோபர் 26) இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் நேற்று இரவு மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்திற்கு சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், தமிழகம் முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். பொதுக்கூட்ட மேடையில் இருந்து ஒரு கி.மீ தூரத்துக்கு அதிமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் தொண்டர் திரளுக்கு மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆளவில்லை. ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் தான் தமிழ்நாட்டில் ஆட்சி செய்கின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் வரை, இனி ஒருபோதும் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த எவரும் ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியாது.
கருணாநிதி குடும்பத்தில் பிறந்தார் என்ற ஒரே அடையாளத்திற்காகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று திமுக மூத்த அமைச்சர்களே சொல்லும் அளவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டனர். ஆனால் அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராகலாம்.
ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எத்தனை வழக்கு போட்டாலும் அதை சந்திக்கக்கூடிய தெம்பு, திராணி அதிமுககாரனிடம் உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் மீண்டும் தூசி தட்டி விசாரிக்கப்படும். அஇஅதிமுக என்ற இயக்கம் இருக்கும்வரை இனி விடியா திமுக குடும்பத்தில் பிறந்தவர்கள் யாரும் அதிகாரத்திற்கு வரமுடியாது.
இந்த கட்சியை முடக்க, உடைக்க பல பேர் பல அவதாரங்கள் எடுத்தார்கள். அவை அத்தனையையும் தகர்த்தெறிந்த கட்சி அஇஅதிமுக. விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்யும் கட்சி திமுக. ஒரு அமைச்சர் வேட்டியை மாற்றிக் கட்டிக்கொண்டு சென்றவர், 472 நாள் சிறைத் தண்டனை அனுபவித்து வெளியில் வந்துள்ளார். மேலிடத்திற்கு யார் அதிக கப்பம் கட்டுகிறாரோ அவர் தான் திமுகவில் சிறந்த அமைச்சர்" எனப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்துக்கு அதிக கூட்டம் திரண்ட நிலையில், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிமுகவினரால் பகிரப்பட்டு வருகின்றன. பொதுக்கூட்டத்தை மாநாட்டைப் போல நடத்தும் கட்சி அதிமுக என அக்கட்சித் தொண்டர்கள் புளகாங்கிதமடைந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications