சென்னை ரியல் எஸ்டேட் துறையே மாறப்போகுது.. வருகிறது 8000 பிரம்மாண்ட கட்டிடங்கள்! அடிக்கும் அதிர்ஷ்டம்
சென்னை: சென்னையில் அதிநவீன சொகுசு வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. சதுர அடி 40,000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை நடக்கிறது. வசதி படைத்த வாடிக்கையாளர்கள் இடத்தின் மதிப்பிற்காக மட்டுமல்லாமல், ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காகவும் போட்டி போடுகின்றனர்.
அடுத்த 2-3 ஆண்டுகளில், சென்னையில் 8,000-க்கும் மேற்பட்ட சொகுசு வீடுகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, சொகுசு வீடுகளுக்கான சந்தை தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் விரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதோடு ஏற்கனவே சென்னையில் நிலம் வைத்துள்ளவர்களுக்கான மதிப்பும் பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொகுசு வீடுகளுக்கான சந்தை
தற்போது மூடப்பட்டுள்ள கிரௌன் பிளாசா ஹோட்டல் இருந்த இடத்தில், அதிநவீன குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் உருவாகவுள்ளது. நெல்சன் மாணிக்கம் சாலையில் பிராண்டட் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதிக வருவாய், சிறிய குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் உயர் வருவாய் பெறும் நிபுணர்களின் ஆர்வம் போன்ற காரணங்களால் சொகுசு வீடுகளின் விற்பனை அதிகரித்து வருகிறது.

அண்ணா நகர் மற்றும் ஆழ்வார்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள சிறிய கட்டுமான நிறுவனங்கள், 2,500 முதல் 3,500 சதுர அடி வரையிலான சிறிய சொகுசு வீடுகளைக் கட்டுகின்றன. பெரிய நிறுவனங்கள் 6,000 முதல் 10,000 சதுர அடி வரையிலான வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகின்றனர். ஆழ்வார்பேட்டை மற்றும் ஆர்.ஏ.புரத்தில் ஒரு சதுர அடியின் விலை ₹30,000 - ₹40,000 ஆகவும், டி.நகர், சாந்தோம் மற்றும் அண்ணா நகரில் ₹20,000 - ₹25,000 ஆகவும் உள்ளது. நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள பிராண்டட் வீடுகள் ஒரு சதுர அடிக்கு ₹20,000 - ₹22,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சென்னை ரியல்டர்கள் இது தொடர்பாக கூறுகையில், சென்னை மற்றும் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் சொகுசு வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. விசாலமான வீடுகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் திறந்தவெளிகளுடன் கூடிய வசதிகளை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். தற்போது 2,500 சதுர அடிக்கு மேலான வீடுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
பெரிய வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. விருந்தினர்களுக்கான கிளப்ஹவுஸ், வணிக மையங்கள், வீட்டு வேலை முதல் கார் ஓட்டுநர் வரை அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். வீடுகளிலேயே அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்" என்றனர்.
வசதியான வாழ்க்கை, குறைந்த பராமரிப்பு, நல்ல போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பு போன்ற காரணிகளை வாடிக்கையாளர்கள் முக்கியமானதாக கருதுகின்றனர். இது குறித்து பேசிய ரியல்டர்கள், கூட்டு குடும்பங்கள் குறைந்து தனிக்குடும்பங்கள் அதிகமாகி வருவதால், பெரிய மற்றும் தனி வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும். சென்னையில் உள்ள ₹20,000 கோடி வீட்டு சந்தையில், சொகுசு வீடுகளின் பங்கு 10% ஆகும். பெரும்பாலான விற்பனை மத்திய வணிக மாவட்டங்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது" என்றனர்.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள்
தொழிலதிபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உயர் அதிகாரிகள், நிதி மேலாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் சொகுசு வீடுகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட நீச்சல் குளங்கள், பெரிய உடற்பயிற்சி கூடங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள், EV சார்ஜிங் நிலையங்கள், கார் கழுவும் இடங்கள், பணியாளர் அறைகள், சலவை சேவைகள் மற்றும் சமூக இடங்கள் போன்ற வசதிகளை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக நான்கு ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவில் இந்த வசதிகள் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
பாரம்பரியம், நிலையான வளர்ச்சி மற்றும் நவீன வாழ்க்கை முறை ஆகியவை சென்னையை சொகுசு ரியல் எஸ்டேட் முதலீட்டிற்கான சிறந்த இடமாக மாற்றுகிறது. சென்னையில் சொகுசு வீடுகளுக்கான சந்தை மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. விசாலமான இடத்துடன், தனிமை, உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பு மற்றும் அதிநவீன வசதிகளை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.
தெற்கு மற்றும் மேற்கு திசையில் சொகுசு வீடுகள்
வரும் ஆண்டுகளில் சொகுசு வீடுகளின் விற்பனை சென்னையின் தெற்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நகரம் தெற்கு மற்றும் மேற்கு திசையில் விரிவடைந்து வருவதால், அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வீடுகள் தேவைப்படும். மத்திய வணிக மாவட்டத்தில் அதிக இடங்கள் இல்லாததால், சொகுசு வீடுகளுக்கான தேவை புறநகர் பகுதிகளை நோக்கி நகர்கிறது.
அசோக் நகர் போன்ற பகுதிகளில் காசாகிராண்ட், பாஷ்யம் என்று அடுத்தடுத்து பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் வருகின்றன. அரிஹந்த் நிறுவனம் பெருங்குடியில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கி, அங்கு சொகுசு குடியிருப்பு திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளது. அந்த இடத்தின் அருகில் 15 மில்லியன் சதுர அடி அலுவலக இடங்கள் உள்ளன. எனவே இது உயர் குடியிருப்பு வளர்ச்சிக்கு ஏற்ற இடமாக இருக்கும்.
சென்னையில் சொகுசு வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், கட்டுமான நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, நகரின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சொகுசு வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications