"சாஃப்ட்வேர் இன்ஜினியர்களா.. ப்ளீஸ் கால் பண்ணாதீங்க".. இந்த மேட்ரிமோனியல் விளம்பரத்தை பாருங்களேன்
சென்னை: ஏற்கனவே சோதனையான காலக்கட்டத்தில் இருக்கும் ஐடி ஊழியர்களை மேலும் புண்படுத்தும் வகையில் ஒரு மேட்ரிமோனியல் விளம்பரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மற்ற துறைகளை ஒப்பிடும் போது, ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் துறையாக ஐடி துறை இருக்கிறது. 3 வருடங்கள் ஐடி நிறுவனத்தில் ஒருவர் பணியாற்றினாலே அவரது ஊதியம் லட்சத்தை தொட்டுவிடும் எனக் கூறும் அளவுக்கு ஐடி துறை பிரம்மாண்ட வளர்ச்சியை கண்டுள்ளது.
ஆனால், சமீபகாலமாக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் நிலவும் கடுமையான பண வீக்கம் காரணமாக ஐடி ஊழியர்கள் பலர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான ஐடி ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் இந்தியாவில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு இது சோதனையான காலக்கட்டம் எனக் கூறப்படுகிறது.

ஐடி ஊழியர்கள் மீது மாறிவரும் பார்வை
இந்த சம்பள விவகாரம் ஒருபுறம் இருக்க, சமீபகாலமாகவே ஐடி ஊழியர்களுக்கு பெண் கொடுக்க மக்கள் தயங்கும் சூழல் அதிகரித்து வருகிறது. சம்பளம் அதிகமாக இருந்தாலும் பணிச்சுமை, நண்பர்களுடன் அடிக்கடி பார்ட்டிக்கு செல்வது, மது பழக்கத்துக்கு அடிமையாகுவது என்பன போன்ற முத்திரை ஐடி ஊழியர்கள் மீது விழுந்திருக்கிறது. ஆண் ஐடி ஊழியர்கள் மீதான பார்வை இப்படி இருக்கிறது என்றால், பெண் ஐடி ஊழியர்கள் மீதான பொதுக் கருத்து வேறு மாதிரியாக உள்ளது.

பெண்களுக்கும் வரன் தேடுவதில் சிரமம்
அதிக ஆண்களுடன் பழக்கம் இருக்கும்; நிறைய சம்பளம் வாங்குவதால் கணவன் வீட்டாரை மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் பெரும்பாலான மக்களிடத்தில் உள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்கு திருமணத்துக்கு வரன் தேடுவது கடினமான விஷயமாக மாறி வருகிறது. இதனால் சரியான வரன் கிடைக்காமல் ஐடி ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

'புண்படுத்தும்' விளம்பரம்
இந்நிலையில், ஐடி ஊழியர்களை நிராகரிக்கும் வகையில் வெளிப்படையாகவே ஒரு மேட்ரிமோனியல் விளம்பரம் சில தினங்களுக்கு முன்பு நாளிதழ்களில் வெளியாகியது. அதில், வசதியான மற்றும் வணிகப் பின்னணி கொண்ட எம்பிஏ படித்த அழகான பெண்ணுக்கு மணமகன் தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐஏஎஸ்/ஐபிஎஸ், பிஸ்னஸ், மருத்துவர் என்ற பின்னணியில் இருக்கும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முடித்துக் கொண்டிருந்தாலாவது பரவாயில்லை, ஆனால் அதற்கு கீழே சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவுசெய்து தொடர்புகொள்ள வேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகைமுரண்
இந்த விளம்பரம்தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விளம்பரத்தை மற்றவர்களை விட ஐடி ஊழியர்கள்தான் அதிக அளவில் பகிர்ந்தும், தங்களை தாங்களே கிண்டல் செய்தும் வருகின்றனர்.
ஒருகாலத்தில் ஐடி ஊழியர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என்றாலே அவர்களுக்கு மாப்பிள்ளை கொடுக்கவும், பெண் கொடுக்கவும் பலர் போட்டிப் போட்டு வரிசையில் நின்ற காலம் மலையேறி, ஐடி ஊழியர்களே வேண்டாம் எனக் கூறும் அளவுக்கு மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைதான் காலத்தின் நகைமுரண் என்பார்களோ..












Click it and Unblock the Notifications