கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்!
சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டாலே போதும், தமிழக அரசியல் களம் அனல் பறக்கும். அதிலும் நேற்று வெளியான மட்ரைஸ்-ஐஏஎன்எஸ் (Matrize-IANS) கருத்துக்கணிப்பு, அறிவாலயத்தின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
"யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" என்பார்கள். ஆனால், தமிழக அரசியலில் 'விஜயின்' வருகை, ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையைப் போட்டிருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஜஸ்ட் மிஸ்ஸில் அறிவாலயம்?
நேற்றைய சர்வே முடிவுகளின்படி, ஆளுங்கட்சியான திமுக கூட்டணி (SPA) வெறும் 104 முதல் 114 இடங்களை மட்டுமே பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 என்ற மேஜிக் நம்பரைத் தொட முடியாமல் திமுக திணறுவது ஸ்டாலின் டீமுக்கு மிகப்பெரிய அதிர்ச்சிதான்.
மறுபுறம், பாஜக தலைமையிலான கூட்டணி 114 முதல் 127 இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம் ஆட்சிக் கட்டிலைப் பிடிக்கப்போகும் ரேசில் முந்திக்கொண்டிருக்கிறது.
வாக்குகளைப் பிரிக்கும் விஜய்!
இந்தத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத 'எக்ஸ்-ஃபேக்டர்' (X-Factor) என்றால் அது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான். தவெக 6 முதல் 12 இடங்கள் வரை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டாலும், அவர் வாங்கும் வாக்கு சதவீதம் தான் திமுகவின் வெற்றியைத் தட்டிப் பறிப்பதாகக் கூறப்படுகிறது.
நேற்றைய மட்ரைஸ்-ஐஏஎன்எஸ் (Matrize-IANS) கருத்துக்கணிப்பின்படி, வாக்கு சதவீதத்தில் ஆளும் திமுக கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் இடையே வெறும் 2% வரை மட்டுமே இடைவெளி இருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆய்வின்படி, பாஜக கூட்டணி (NDA) 39-40% வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருக்க, திமுக கூட்டணி (SPA) 37-38% வாக்குகளுடன் மிக நெருக்கமாகப் பின்தொடர்கிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 14% முதல் 15% வரையிலான வாக்குகளைப் பிரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
விஜய் வைக்கும் செக்
இந்த வாக்குகள் பெரும்பாலும் திமுகவின் பாரம்பரிய ஆதரவு தளத்திலிருந்தும், நடுநிலை வாக்காளர்களிடமிருந்தும் பிரிவதுதான் திமுகவின் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி (NTK) 6% முதல் 8% வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளும் நிலையில், விஜய்யின் வருகை திராவிடக் கட்சிகளின் வாக்குகளைச் சிதறடித்து களத்தையே தலைகீழாக மாற்றியிருக்கிறது.
"திமுகவின் கோட்டையில் விஜய் அடித்திருக்கும் கன்னக்கோல்" தான் இந்தச் சரிவுக்குக் காரணம். குறிப்பாக:
இளைஞர் வாக்குகள்: திமுகவின் பக்கமிருந்த இளம் வாக்காளர்களைத் தனது மேஜிக் பேச்சாலும், 'நாளைய தீர்ப்பு' பிளானாலும் விஜய் தன் பக்கம் இழுத்துவிட்டார்.
வாக்குச் சிதறல்: திமுகவுக்கு விழ வேண்டிய அதிருப்தி ஓட்டுகள் அதிமுகவுக்குப் போகாமல், தவெக-வுக்குப் பிரிந்து செல்வதால், பல தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வியைச் சந்திக்கும் எனத் தெரிகிறது.
கிங் மேக்கராகும் 'ஜனநாயகன்'?
யார் ஆட்சி அமைப்பது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளார். மட்ரைஸ் சர்வேயின்படி, எந்தக் கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், விஜய்யின் ஆதரவு இன்றி யாரும் கோட்டையில் கொடியேற்ற முடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது.
அறிவாலயம் தனது வியூகத்தை மாற்றுமா? அல்லது தாமரைத் தடாகமாக தமிழகம் மாறுமா? விஜய்யின் ஆட்டம் திமுகவின் 'உதயசூரியனை' மறைக்குமா? மே 4-ம் தேதி தெரியும்!












Click it and Unblock the Notifications