10 நாட்கள் ஓவர்.. இன்னும் முதல்வர் விஜய்யை சந்திக்கலையே.. சைலண்ட் மோடில் மேயர் பிரியா.. காரணம் என்ன?
சென்னை: தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று 10 நாட்களாகிவிட்ட சூழலில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் இதுவரை நேரில் சந்திக்கவில்லை. இதனால் ஜார்ஜ் கோட்டைக்கும் ரிப்பன் மாளிகைக்குள் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதன்பின் தவெக ஆட்சி அமைக்க சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தன. காங்கிரஸ் கட்சி நேரடியாக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக தரப்பில் 25 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன் மூலமாக இருபெரும் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக முதல்முறையாக புதிய கட்சி ஆட்சி அமைத்து வரலாறு படைத்தது. முதல்வராக பதவியேற்ற விஜய் திமுக தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்வர் விஜய்க்கு பல்வேறு சங்கங்களும், அமைப்புகளும் நேரில் சந்தித்து வாழ்த்தி தெரிவித்து வருகின்றன.
இன்னொரு பக்கம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக எம்எல்ஏ-க்கள் பல்வேறு ஆய்வுகளிலும், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் விஜய் நடத்திய நகராட்சி நிர்வாக ஆலோசனை கூட்டத்திலும் கூட மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நிலைக்குழு தலைவர்கள் யாருமே பங்கேற்கவில்லை.
திமுக ஆட்சியின் போது சென்னையில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா முதல் ஆளாக முன்வரிசையில் நிற்பார். ஆனால் முதல்வராக விஜய் பதவியேற்றுள்ள போதும், அவரை சந்தித்து மேயர் பிரியா வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக மேயர் பிரியாவிடம் கேட்கையில், மே 4ஆம் தேதிக்கு முன் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
துணை மேயர் மகேஷ் குமார் வெளிநாட்டில் இருப்பதாக கூறியுள்ளார். மேயர் பிரியா விடுப்பில் இருப்பதை முறையாக மாநகராட்சி ஆணையரிடமும் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் சென்னை மாநகராட்சியில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்ற கவுன்சிலர்கள் யாரும் தவெகவின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் திமுகவில் மட்டும் 153 கவுன்சிலர்கள் இருக்கின்றனர். தவெக ஆட்சி அமைத்ததில் இருந்தே திமுக கவுன்சிலர்கள் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டனர். இதனால் ஜார்க் கோட்டைக்கும் ரிப்பன் மாளிக்கைக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த இரு அமைப்புகளின் கூட்டு செயல்பாடுகளின் மிகவும் அவசியம். இதனால் விரைவில் இரு தரப்பும் சுமூகமாக இணைந்து செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications