தமிழ்நாட்டிற்கு எதிராக.. மோடி அரசின் 'வஞ்சகமும், துரோகமும்' தொடர்கிறது.. வைகோ சுளீர்
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மத்திய அமைச்சரைச் சந்திக்கவுள்ள நிலையில், மோடி அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வஞ்சகமும் துரோகமும் செய்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா புதிதாக அணை கட்ட முயல்கிறது. இந்த அணை கட்டப்பட்டால் டெல்டா விவசாயிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
இது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரைத் தமிழ்நாடு அனைத்து கட்சி பிரதிநிதிகள் நேரில் சந்தித்து முறையிடப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

டெல்லி பயணம்
அதன்படி தமிழ்நாடு அனைத்துக்கட்சி குழுவினர் வெள்ளிக்கிழமை நீர்ப்பாசனத்துறை அமைச்சரை சந்திக்கின்றனர். இதற்காகத் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் டெல்லி சென்றனர். அப்போது விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.

வஞ்சகமும் துரோகமும்
அப்போது வைகோ கூறுகையில், "தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க ஏழரை கோடி தமிழர்களின் கருத்தை ஒன்றிய அமைச்சரிடம் எடுத்துக் கூற, ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் குரலாக நாங்கள் டெல்லி செல்கிறோம். ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு நயவஞ்சகம் செய்து வருகிறது. மேகதாது, கல்வி, நீட் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வஞ்சகமும் துரோகமும் செய்து வருகிறது" என்றார்.

ஆர்.எஸ் பாரதி
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மேகதாது விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசிடம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அனைத்து கோரிக்கைகளும் எடுத்து வைக்கிறோம். அணை விவகாரத்தில் சட்டப் பாதுகாப்பு உள்ளது. இருந்தாலும் கூட படிப்படியாகக் கோரிக்கைகளை எடுத்து வைப்போம். அதன் முதல் கட்டமாக மேகதாது அணை விவரத்தில் ஒன்றிய அரசைச் சந்தித்து கோரிக்கை எடுத்து வைக்க உள்ளோம்" என்று கூறினார்.

எதிர்வினை பலமாக இருக்கும்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட அனுமதி பெற்று இருப்பது தமிழ்நாட்டுக்குச் செய்கின்ற துரோகம். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக மேகதாது அணை விவகாரம் உள்ளது. கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு சிறு துரும்பு அளவில் பாதிப்பு இருந்தாலும் அதன் எதிர்வினை பலமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications