“டபுள் டிஜிட் சீட் கேட்போம் என பேசினேனா? ஏங்க.. அப்படி ஒரு வார்த்தையே வரலையே” : டென்ஷன் ஆன வைகோ!
சென்னை: திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் சீட் கேட்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர் கேட்டதால் டென்ஷன் ஆனார் வைகோ.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகள் கேட்போம் என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் தாம் பேசியதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக விளக்கம் அளித்துள்ளார்.

மதிமுக நிர்வாகக் குழு கூட்டம்
மதிமுகவின் நிர்வாக குழு கூட்டம் இன்று அக்கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
வைகோ பேட்டி
அப்போது பேசிய வைகோ, "திமுக கூட்டணியில் எதற்காக இணைந்தோம் என மிகத் தெளிவான அறிக்கை கொடுத்தோம். இந்துத்வா சக்திகள் தமிழ்நாட்டிலே காலூன்றிவிடக் கூடாது என்பதற்காக, திராவிடர் இயக்கத்தைப் பாதுகாப்பதற்காக திமுகவுடன் மதிமுக உடன்பாடு கொண்டு கூட்டணியிலேயே சேருவது என்று உயர்நிலைக் குழுவில் முடிவெடுத்தோம். அதையே பொதுக்குழுவும் ஏற்றுக் கொண்டது. அந்த அடிப்படையில்தான் திமுகவுடன் நாங்கள் உடன்பாடு வைத்தோம். இன்றைக்கும் அதே நிலைப்பாடுதான். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
எம்.பி பதவி
ஒரு பீரியடில் ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்தார்கள். அவ்வளவுதான். இது பற்றி எல்லாம் தேர்தல் வரும்போது கூட்டணியில் பேச வேண்டிய பேச்சு. நாங்கள் எந்த விரக்தியிலும் இல்லை. நாங்க எல்லாக் கட்டங்களையும் கடந்தவர்கள். ஒரு தேர்தலையே முழுமையாகப் புறக்கணித்தவர்கள். தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் அப்படி செய்தது இல்லை.
அதனால் நாங்கள் எந்த ஒரு சூழ்நிலைக்கும் தயாராக இருப்போம். நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்வோம் என உறுதிப்பட முடிவு எடுத்துள்ளோம். மதிமுகவின் பொதுக்குழுவிலும் இன்றைய நிர்வாகக் குழுவிலும் இந்த முடிவை எடுத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
டபுள் டிஜிட்டில் சீட்
அப்போது, "மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்போம் என நீங்கள் பேசியதாக கூறப்படுகிறதே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வைகோ, "அப்படி சொல்லவே இல்லையே.. பொய்களைப் பரப்புவதற்கு என ஒரு கூட்டமே இருக்கிறது. ஒன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில் இரட்டை இலக்கம் என்ற வார்த்தையே என் வாயில் இருந்து வரவில்லையே.. நீங்கள் எப்படி கேட்கிறீர்கள்?
நான் பேசாத ஒன்றை பேசியதாக கேட்கிறீர்களே எந்த அடிப்படையில்? இது உண்மையா என்று கேட்கிறீர்களே? யாரோ ஒருத்தன் தெருவில போகிறவன் உளறியிருப்பான். அதை கேட்டுகிட்டு நீங்க இங்க கேள்வி கேட்கிறீர்களே? இரட்டை இலக்கம் என்று நான் சொல்லவே இல்லையே.
நான் பேசவே இல்லை
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம், நீங்கள் எத்தனை தொகுதிகளை திமுகவிடம் கேட்பீர்கள்? என திரும்ப திரும்ப பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் வேண்டும் என்றால் 8 சட்டமன்ற உறுப்பினர்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதை நினைத்து 12 தொகுதிகளை திமுகவிடம் கேட்கலாம்; இதுவும் கூட என் முடிவு அல்ல. மதிமுக தலைமை கழகம்தான் முடிவு எடுக்கும் என கூறினார் துரை வைகோ.
திமுகவிடம் 12 தொகுதி கேட்போம் என யாரும் யோசிக்கவும் இல்லை.. கேட்கவும் இல்லை. ஒரு உதாரணத்துக்குதான் துரை வைகோ 12 தொகுதிகள் கேட்போம் எனச் சொன்னார். இரட்டை இலக்க தொகுதிகள் கேட்போம் என நான் பேசவே இல்லை என்று சொன்னபிறகும் நீங்கள் ஏன் அப்படி ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள்?" என டென்ஷனாக ரிப்ளை கொடுத்துள்ளார் வைகோ.
திமுக கூட்டணியில் மதிமுக
திமுக கூட்டணியில் வைகோ தலைமையிலான மதிமுக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு தலா ஒரு மக்களவை, மாநிலங்களவை இடங்கள் ஒதுக்கப்பட்டன. மக்களவைக்கு கணேசமூர்த்தியும், மாநிலங்களவைக்கு வைகோவும் சென்றனர்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் ஆறு இடங்களில் மதிமுக போட்டியிட்டது. அதில் 4 இடங்களில் வென்றது. 2024 மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. துரை வைகோ எம்.பி ஆனார். வைகோவுக்கு ராஜ்யசபா சீட் மீண்டும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறி பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாகவும், துரை வைகோ மத்திய இணை அமைச்சர் ஆவதற்கு பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம் என்று இன்று நடந்த மதிமுக கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications