முரசொலி மாறன் இப்போது தேவைப்படுகிறார்... அவரது முழக்கம் தேவைப்படுகிறது... வைகோ பேச்சு
சென்னை: தற்போதைய அரசியல் சூழலில் முரசொலி மாறனும் அவரது முழக்கங்களும் தேவைப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
முரசொலி மாறனின் 87-வது பிறந்தநாளையொட்டி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் நடத்திய நினைவரங்கத்தில் அவர் இதனைக் கூறினார்.
முரசொலி மாறன் இப்போது இல்லையென்றாலும் அவர் ஆற்றிய காரியங்கள் எப்போதும் அவரை நினைவுகூற வைக்கும் என வைகோ தெரிவித்தார்.

வைகோ பங்கேற்பு
முரசொலி மாறன் நினைவரங்கத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முரசொலி மாறன் தனக்கு அரசியலில் அகரம் கற்றுக்கொடுத்த ஆசான் என புகழாரம் சூட்டினார். முதல்முறையாக எம்.பி.யாகி டெல்லிக்கு சென்ற போது வாஞ்சையோடு தன்னை வரவேற்று எப்படி பேச வேண்டும் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றியெல்லாம் எடுத்துக்கூறியதாக விவரித்தார்.

பாசத்தோடு
முரசொலி மாறனை எல்லோரும் கோபக்காரர் என்று சொல்லிக் கேட்டிருப்பதாகவும் ஆனால் தன்னிடம் ஒரு முறை கூட அவர் கடிந்துகொண்டதில்லை எனவும் வைகோ கூறினார். மேலும், ஒருமுறை டெல்லியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று இங்கு சிக்கன் நல்லாயிருக்கும் சாப்பிடு என அண்ணனுகே உரிய அன்போடு வாங்கிக்கொடுத்தவர் மாறன் என தனது நினைவலைகளை பகிர்ந்தார்.

பிரதமர் பிரதிநிதி
கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்கு பிரதமரின் பிரதிநிதியாக தனி விமானத்தில் அப்போதைய வாஜ்பாயால் அனுப்பி வைக்கப்பட்டவர் முரசொலி மாறன் என பெருமிதம் தெரிவித்தார். முரசொலி மாறன் மீது அந்தளவிற்கு அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர் வாஜ்பாய் எனத் தெரிவித்தார். 2 நாட்கள் தூக்கமின்றி வளரும் நாடுகளுக்கு சாதகமாக ஒப்பந்தங்களை மாற்றியமைத்த பெருமைக்குரியவர் முரசொலி மாறன் என கூறினார்.

மாறன் தேவைப்படுகிறார்
தற்போதைய அரசியல் சூழலில் முரசொலி மாறனும் அவரது மாநில சுயாட்சி முழக்கமும் தேவைப்படுவதாக கூறிய வைகோ, அவரின் உரை வீச்சுகள் சம்மட்டி அடியை போன்றிருக்கும் என நினைவுகூர்ந்தார். முரசொலி மாறன் இப்போது இல்லையென்றாலும் அவர் ஆற்றிய காரியங்கள் மூலம் என்றும் நினைவில் இருப்பார் என வைகோ உருக்கமுடன் பேசி முடித்தார்.












Click it and Unblock the Notifications