தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா..? தென் தமிழகத்தை சுடுகாடு ஆக்கும் முயற்சி -வைகோ ஆவேசம்
சென்னை: தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கூடங்குளம் அணுஉலை வளாகத்திலேயே, அணுக்கழிவுகளைக் கொட்டி சேமிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தென் தமிழ்நாட்டையே சுடுகாடாக ஆக்கும் முயற்சி என அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அணு சக்தி
இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைத்து வரும் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் செயல்படத் தொடங்கியதும், அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்தின் உள்ளேயே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை (Siting Clearance) வழங்கி இருக்கிறது.

கடும் கண்டனம்
கூடங்குளம் அணு உலைகளையே நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்ற கூடங்குளம், இடிந்தகரை வட்டார மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், அங்கேயே அணுக்கழிவு மையத்தை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போது மீண்டும் ஒன்றிய அரசு, கூடங்குளம் அணுஉலை வளாகத்தின் உள்ளே அணுக்கழிவு சேமிப்பு மையத்தை அமைப்பதற்கு இடத்தைத் தேர்வு செய்ய அனுமதி அளித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்கு உரியது.

அணுக் கழிவு
அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் "ஆழ்நிலக் கருவூல மையம் (DGR)" அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்றுவரை இந்தியாவில் இல்லை. இந்தச் சூழலில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை கட்டமைத்து, அதில் கூடங்குளம் அணுஉலை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள மற்ற 22 அணுஉலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு முனைப்பாக இருக்கிறது.

உலக நாடுகள்
அணுக் கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இந்திய அரசிடம் இதுவரையில் இல்லை என்பதை ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளே அணுக்கழிவுகளை முழுமையாக செயல் இழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இன்றி திணறிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், புளுட்டோனியம் போன்ற அணு உலைக் கழிவுகளைச் செயலிழக்கச் செய்ய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
Recommended Video

சுடுகாடு
இந்நிலையில், கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்திலேயே அணுக் கழிவு மையத்தை உருவாக்கி, அணுக்கழிவுகளைக் கொட்டி சேமிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பது தென் தமிழ்நாட்டையே சுடுகாடாக ஆக்கும் முயற்சியாகும்.இந்த நாசகார திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications