வழுக்கி விழுந்த வைகோ! வலது தோளில் எலும்பு முறிவு! சென்னையில் இன்று ஆபரேஷன்.. துரை வைகோ முக்கிய தகவல்
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. வீட்டில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஆபரேஷன் நடக்க உள்ளது.
மதிமுக நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக கடந்த 25-ம் தேதி நெல்லையில் தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்தார். அப்போது அங்கு கால் இடறி விழுந்ததில் வைகோவுக்கு, வலது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக, தூத்துக்குடி சென்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் வைகோ.

ஆபரேஷன்: பிறகு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, இன்று அவருக்கு ஆபரேஷன் செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்துள்ளது..
முன்னதாக நேற்றையதினம், வைகோவின் உடல் நிலை குறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார்.
அறுவை சிகிச்சை: அதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவறி விழுந்த தகவலறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னை அழைத்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
அரசியலில் வைகோ இழந்தது அதிகம். ஆனால் தனது நேர்மை, தியாகத்தால் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறார். அதனால் தான், அரசியல் எல்லைகளை கடந்து அவர் நலம்பெற வேண்டும் என அனைவரும் தங்கள் விருப்பத்தை என்னிடம் தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டனர். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. அவருக்கு செய்யவிருப்பது சிறிய அறுவை சிகிச்சை தான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை.
எலும்பு முறிவு: இதனிடையே, அவரது உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார்.
எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான டென்னிஸ், இப்போது நடைபெறுகிற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார். தொலைக்காட்சி செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்.
சந்திக்க வரவேண்டாம்: எனவே, அவர் பற்றி வெளிவரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள். மருத்துவமனை நிர்வாகத்துக்கும், பிற நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் வரக் கூடாது என்பதால், யாரும் தலைவரை சந்திக்க வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பிய பிறகுகட்சி நிர்வாகிகள் அவரை சந்திக்கலாம்" என்று துரை வைகோ கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications