மேகதாது அணை..உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பை பதிவு செய்த தமிழக அரசு - வழக்கறிஞர் கண்ணதாசன்
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடாக அணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது.
சென்னை: மேகதாது அணை பற்றி விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணைய குழுவிற்கு அதிகாரமே இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணைய குழுவில் விவாதிக்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டதை அடுத்து ஆணைய கூட்டத்தை நடத்தலாம் அதே நேரத்தில் மேக தாது குறித்து விவாதிக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாக வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் பங்கீடு முறையாக மேற்கொள்ளவில்லை என கர்நாடகா மீது தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு முறையாக நீர் பங்கீடு அளிக்கப்படுவதாக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதுபோல், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் பங்கீடு முறையாக மேற்கொள்ளவில்லை என கர்நாடகா மீது தமிழக அரசு புகாரளித்துள்ளது.
இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது என்று அதிரடியாக அறிவித்துள்ளது. மேகதாது விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் அறிய விரும்புகிறோம் என்றும், மேகதாது அணை பற்றி விவாதிக்கலாமா? கூடாதா என்பது பற்றி காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், 2018ஆம் ஆண்டு முதல் மேகதாது பிரச்சனை இருக்கிறது, அதனால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒருவாரம் ஒத்திவைத்தால் ஒன்றும் ஆகாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு குறித்தும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் கண்ணதாசன், காவிரி ஆற்றின் குறிக்கே அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு முழு உரிமை உள்ளது எனவும் அதை காவிரி மேலாண்மை ஆணைய குழுவில் விவாதிக்கலாம் எனவும் வாதிடப்பட்டது.
தமிழக அரசு சார்பில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அணை பற்றி விவாதிக்க அந்த ஆணையத்திற்கு அதிகாரமே கிடையாது என வாதிடப்பட்டது. மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்னும் ஒரு வார காலத்தில் என்ன நடந்து விடப்போகிறது என்று கேட்டனர். காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் நடத்தலாம் அதே நேரத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
வழக்கை வரும் செவ்வாய்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளனர். அதே நேரத்தில் காவிரி ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசிற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications