தர்கா இருந்தால் மட்டுமே அந்த நிலம் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமாகாது! சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு இடத்தில் தர்கா அமைந்திருப்பதாலேயே அந்த நிலம் தானாக வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வராது என சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு வழங்கியுள்ளது. 'சர்க்கார் சையத் ஹபிபுல்லா ஷா காதரி ஆரிஃப் vs தமிழ்நாடு வக்ஃப் வாரியம்' வழக்கில் நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி ஜூன் 5 அன்று பிறப்பித்த இந்த உத்தரவு, வக்ஃப் சொத்து தொடர்பான பல விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

நீதிபதி தனது தீர்ப்பில், "ஒரு தர்கா இருப்பதால் மட்டுமே, சட்டத்தின்படி அது வக்ஃப் நிறுவனமாக நிறுவப்படாமலோ அல்லது கருதப்படாமலோ இருந்தால், வக்ஃப் வாரியத்திற்கு அதன் மீது தானாக எந்த அதிகாரமும் வராது" என்று தெளிவாகக் குறிப்பிட்டார். ஒவ்வொரு கல்லறையும் அல்லது தர்காவும் தானாக வக்ஃப் சொத்தாக மாறிவிடாது என்றும், இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பக்தி, சமயம் அல்லது தொண்டு நோக்கங்களுக்காக ஒரு முஸ்லிமால் அந்தச் சொத்து நிரந்தரமாக அர்ப்பணிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

Waqf Dargah

வழக்கின் பின்னணி

சென்னை திருவல்லிக்கேணி காமராஜர் சாலையில் அமைந்துள்ள 'சர்க்கார் சையத் ஹபிபுல்லா ஷா காதரி ஆரிஃப் ரப்பானி ஹசரத் தர்கா' தொடர்பான இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது. வக்ஃப் வாரியம், முன்கூட்டியே எந்த நில அளவையும் (Survey) மேற்கொள்ளாமல், வக்ஃப் சட்டத்தின் கீழ் தர்காவைப் பதிவு செய்ய உத்தரவிட்டதோடு, ஒரு முத்தவல்லியை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதை எதிர்த்து தர்காவை பராமரித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டாளர் தரப்பில், தர்கா 240 ஆண்டுகள் பழமையானது என்றும், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் குடும்பத்தினரால் பராமரிக்கப்படுவதாகவும் வாதிடப்பட்டது. வக்ஃப் வாரியம் ஏ.ஷைன்ஷா என்பவரை புதிய முத்தவல்லியாக நியமித்ததை எதிர்த்த அவர், அந்த நிலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என்றும், வக்ஃப் சொத்து அல்ல என்றும் வாதிட்டார். மேலும், வக்ஃப் சட்டத்தின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் முத்தவல்லி நியமிக்கவோ, சொத்தை வக்ஃப் சொத்தாக அறிவிக்கவோ வாரியத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

வக்ஃப் வாரியம் & பொதுப்பணித்துறை வாதங்கள்

வக்ஃப் வாரியம் இந்த மேல்முறையீட்டை தீவிரமாக எதிர்த்தது. அந்த நிலமும் சுற்றியுள்ள பகுதிகளும் முதலில் தர்காவுக்குச் சொந்தமாக இருந்ததாகவும், பின்னர் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை வசம் சென்றதாகவும் வாதிட்டது. வக்ஃப் சட்டப் பிரிவு 36(4)ன் கீழ் தர்காவைப் பதிவு செய்யும் நடைமுறை பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தது.

எனினும், பொதுப்பணித்துறை தரப்பில், அந்த நிலம் 'அரசுப் புறம்போக்கு நிலம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 'பாரத் ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ்' அமைப்புக்கு வாடகையின்றி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தர்கா பராமரிப்பாளர்கள் மோசடியாக நிலத்தை பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்தச் சொத்து வக்ஃப் சொத்துகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றார். நில அளவை செய்யப்படவில்லை, அரசிதழில் அறிவிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். "ஒரு சொத்தை வக்ஃப் சொத்தாக அறிவிப்பதற்கு முன் நில அளவை நடத்துவது Sine qua non (இன்றியமையாத நிபந்தனை)" என்று தெளிவாகக் கூறினார்.

தனிப்பட்ட குடும்பக் கல்லறைக்கும், பொதுச் சமய அறக்கட்டளையாகப் பராமரிக்கப்படும் தர்காவுக்கும் இடையே வித்தியாசம் பார்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. முத்தவல்லி நியமனம் என்பது வக்ஃப் சொத்து இருப்பதை முன்கூட்டியே உத்தேசிப்பதாகும். எனவே, இந்தத் தகராறை சிவில் நீதிமன்றமே முதலில் தீர்க்க வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், வக்ஃப் வாரியத்தின் முத்தவல்லி நியமனம் மற்றும் தர்கா பதிவு உத்தரவுகளை ரத்து செய்தது. மேல்முறையீட்டை அனுமதித்தும் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு வக்ஃப் வாரியத்தின் அதிகார வரம்பு குறித்து தெளிவான வழிகாட்டுதலை அளிப்பதாக வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். மேல்முறையீட்டாளருக்காக வழக்கறிஞர் வி. அனுஷா, வக்ஃப் வாரியத்திற்காக சி. சங்கர், பொதுப்பணித்துறைக்காக கூடுதல் அரசு வழக்கறிஞர் பி. குருநாதன், தர்கா தரப்பில் என்.ஏ. நாசிர் ஹுசைன் ஆகியோர் ஆஜரானனர்.

இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் உள்ள பல தர்கா மற்றும் வக்ஃப் தொடர்பான விவகாரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+