குடையை மறந்துடாதீங்க- சென்னை+ 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்த வெயில் குறைந்தது தற்போது மழை தொடங்கியுள்ளது. வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்னரே 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. வழக்கமாக வேலூர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் வெயில் பதிவாகும், ஆனால் இந்த முறை மதுரை, ஈரோடு, சென்னை என பரவலாக வெயில் 100 டிகிரியை கடந்து வீசியது. இதற்கிடையில் அக்னி நட்சத்திரம் தொடங்கி முடியும் வரை வெயில் 100 டிகிரிக்கு அதிகமாகதான் பதிவாகியிருந்தது.

இருப்பினும் அக்னி முடிந்த பின்னர் வெயில் குறையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துர்திஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. வெயிலுடன் அனல் காற்றும் மக்களை வாட்டி எடுத்தது. இந்த சூழலில்தான் வங்கக்கடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அதுபோல கேரளாவிலும் பருவமழை எட்டி பார்க்க தொடங்கியது. கேரளாவின் பவருமழை தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளை குளிர்வித்தது.
அதேபோல வங்க கடலில் உருவான மழை மேகங்கள் வடமாவட்டங்களில் மழையாக பொழிந்தது. இதனால் ஓரளவு குளிர்ச்சியான சூழல் உருவானது. சென்னையை பொறுத்த அளவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 19ம் தேதி முதல் 20ம் தேதி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழை பொழிந்துள்ளது. தென் மேற்கு பருவமழை காலத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சென்னையில் 162 மி.மீ மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக 41.1 மி.மீ அளவுதான் மழை பொழிவு இருக்கும்.
அந்த வகையில் இது இயல்பை விட 295 சதவிகிதம் அதிகம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இயல்பை விட 5 சதவிகிதம் அதிகமாகவே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 3 மணி நேரத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
நேற்று காலை வரை நல்ல வெயில் இருந்த நிலையில் நேற்று மதியம் முதல் சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. நேற்று இரவு வரை வானம் கரும் மேகம் சூழ்ந்து காணப்பட்டது. இன்று காலை வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications