எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் சந்திக்காத வீழ்ச்சியா?-வீழ்ச்சி...எழுச்சி..சரிவு...அதிமுக மீண்டு எழுமா?
2019 மக்களவை தோல்விக்குப்பின் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது அதிமுக. இது புதிதான ஒன்றா? அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவும் தோல்வியை சந்தித்துள்ளனர். அதிமுக பலமுறை கடுமையாக வீழ்த்தப்பட்டுள்ளது. அடுத்து இமாலய வெற்றியையும் பெற்றுள்ளது. தற்போது பெற்றுள்ள தொடர் தோல்வியிலிருந்து அதிமுக மீளுமா? கடந்த கால நிகழ்வுகள் சொலவதென்ன எங்கே தவறுகிறார்கள் பார்ப்போம்.

திமுகவுக்கு வனவாசத்தை அளித்த எம்ஜிஆர்
1971 ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 2 ஆக பிளவுப்பட்டு பழைய காங்கிரஸ் ஒருபுறமும், திமுக ஒருபுறமும் தேர்தலை சந்திக்க இமாலய வெற்றியை திமுக அடைந்தது. காரணம் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் திமுகவை ஆதரித்ததும், எம்ஜிஆர், கருணாநிதி ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்தித்ததும் ஆகும். இது திமுக கடைசியாக பெற்ற பெருவெற்றி அதன் பின்னர் பெரும் வனவாசத்துக்குப்பின் 1989 ஆம் ஆண்டு திமுக பெற்றது. இதற்கு காரணம் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக.

கருணாநிதி செய்த தவறு...விஸ்வரூபம் எடுத்த எம்ஜிஆர்
1972 ஆம் ஆண்டு அந்த முடிவை கருணாநிதி எடுக்க தயங்கியதாகவும் உடனிருந்தோர் வற்புறுத்தல் காரணமாக எடுத்ததாகவும் சொல்வார்கள். அது எம்ஜிஆரை திமுகவை விட்டு நீக்க எடுத்த முடிவு. இதன் விளைவை திமுக அனுபவித்தது. திமுக மட்டுமல்ல, எம்ஜிஆரை ஆதரித்து அதிமுகவை வளர்ப்பதன் மூலம் திமுகவை வீழ்த்தலாம் என்று முடிவு செய்த இந்திராவும் அனுபவித்தார். காரணம் வீழ்ந்தது திமுக அல்ல காங்கிரஸ். அது இன்றுவரை இரண்டாம் இடத்திற்கு வர முடியாமல் திமுக-அதிமுக தமிழகத்தை ஆக்கிரமித்தது.

அதிமுகவை உச்சகட்ட வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜெயலலிதா
இப்படி திமுகவுக்கும், காங்கிரசின் வளர்ச்சிக்கும் தடையாக வளர்ந்த அதிமுக தமிழகத்தின் முதன்மையான பெரிய கட்சி என்பதை எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா காலத்தில் நிரூபித்தது. 38% வாக்குகளுக்கு மேல் அதிமுகவுக்கு இருந்த காலம் ஒன்று உண்டு. இரட்டை இலை செல்லாத இடமில்லை. பட்டிதொட்டியெங்கும் அதை கொண்டுச் சேர்த்தார் எம்ஜிஆர். 96 ஆம் ஆண்டு அதிமுக படுதோல்வி அடைந்தபோது பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவை திட்டிய வயதான பாட்டி ஒருவர் தான் இரட்டை இலைக்கு வாக்களித்ததாக சொன்னார். அதுகுறித்து நிருபர் கேட்டபோது அது அந்த மகராசன்(எம்ஜிஆர்) சின்னம் என்று சொன்னார் அந்த அளவுக்கு இரட்டை இலை சின்னம் மீது ஒருவித மவுசு பெண் வாக்காளர்களுக்கு உண்டு.

அதிமுக சந்தித்த முதல் வீழ்ச்சி
அப்படிப்பட்ட அதிமுக 87 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்தபோது இரண்டாக பிளவுப்பட்டது, 89 ஆம் ஆண்டு தோல்வியை சந்தித்தது. இது ஏதோ எம்ஜிஆர் மறைவுக்குப்பின் நடந்த தோல்வி என்று பார்ப்பவர்களுக்கு ஒரு தகவல், 1980 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்ததும் நடந்துள்ளது. 39 தொகுதிகளில் 37-ல் தோல்வி, மேற்கு மண்டலத்தில் கோபிச்செட்டிப்பாளையம், தென்மண்டலத்தில் சிவகாசியிலும் மட்டுமே வென்றது. 1973 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்து இடைத்தேர்தலில் சரித்திரபூர்வ வெற்றிப்பெற்ற திண்டுக்கல் தொகுதியிலும் தோல்வி கிடைத்தது. அதுவும் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எம்ஜிஆர் தலைமையில் சந்தித்த தேர்தலில் படுதோல்வியை அதிமுக சந்தித்தது. எம்ஜிஆர் சந்தித்த, அதிமுக சந்தித்த முதல் மோசமான தோல்வி அது. முதல் வீழ்ச்சி.

மீண்டும் எழுச்சி
அதன் பின்னர் இதைகாரணமாக வைத்து அதிமுக ஆட்சியைக் கலைத்தார் இந்திராகாந்தி. காங்கிரஸும்-திமுகவும் ஆளுக்கு தலா 113 இடங்களில் (மெஜாரிட்டிக்கு 118 தேவை) நின்றன , முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம், மறுபுறம் எம்ஜிஆர் ஊர் ஊராக போய் ஆட்சியைக்கலைத்தது குறித்து நியாயம் கேட்டு பேசினார். இம்முறை 1977 தேர்தல் வெற்றியைவிட கூடுதலாக 2 தொகுதிகள் அதிகம் வென்று மீண்டும் முதல்வரானார் எம்ஜிஆர். இது உடனடியாக டக்கென்று அதிமுகவின் பெற்ற எழுச்சி.

காங்கிரஸை விடாமல் பற்றிய எம்ஜிஆர்
அதன் பின்னர் காங்கிரஸுடன் கைகோர்த்தால் தம்மை அசைக்க முடியாது என்கிற நிலைப்பாட்டை எடுத்தார் எம்ஜிஆர். அதன் பின்னர் அவருக்கு தோல்வி கிடைக்கவில்லை. 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையிலிருந்தபடியே வெற்றிப்பெற்று 3 ஆம் முறையாக முதல்வர் ஆனார்.

1986 உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக தோல்வி
இந்நிலையில் மஸ்டர் ரோல் விவகாரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. பின்னர் 1986 ஆம் ஆண்டு மாநகராட்சியைத்தவிர நகராட்சிகள், உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு முதன்முறையாக 18 வயது உள்ளவர்கள் வாக்களித்தனர். அப்போது இருந்த 3 மாநகராட்சிகளுக்கு (சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகள்)மட்டும் தேர்தல் நடக்கவில்லை.

திமுக அமோக வெற்றிப்பெற்ற உள்ளாட்சித்தேர்தல்
இந்த உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் அதிமுக தோல்வியை தழுவியது. மொத்தமுள்ள 97 நகராட்சிகளில் 70 ஐ திமுக கைப்பற்றியது. ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கான தேர்தலில் மொத்தமுள்ள 380 இடங்களில் திமுக 138 இடங்களை கைப்பற்றியது. அதிமுக 129 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ஆனால் கூட்டணிக்கட்சி காங்கிரஸுடன் சேர்த்தால் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியது எனலாம். இதற்கு காரணம் எம்ஜிஆரின் உடல்நலப்பிரச்சினை கட்சிக்குள் ஜெயலலிதா தலைமையில் ஒரு கோஷ்டி, ஆர்.எம் வீரப்பன் தலைமையில் ஒரு கோஷ்டி என பிரிந்திருந்தது எனலாம்.

தோல்வி எண்ணத்தால் மாநகராட்சி தேர்தலை தள்ளி வைத்த எம்ஜிஆர்
தென் மாவட்டங்களி திமுக அதிக நகராட்சிகளை கைப்பற்றியது. இதனால் மதுரை, சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை எம்ஜிஆர் நடத்தவில்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, பத்தாண்டுகள் கழித்து 1996 ஆம் ஆண்டுதான் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் மீண்டும் நடத்தப்பட்டன.

1987 எம்ஜிஆர் மறைவு பிளவுபட்ட அதிமுக
1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்குப்பின் அதிமுக மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. கட்சி இரண்டாக பிளவுப்பட்டு சட்டப்பேரவையில் மோதிக்கொண்டது. வி.என் ஜானகி முதல்வரானார். ஆனால் ஆட்சிக்கவிழ்ந்தது. அதிமுக சிதறும் நிலை ஏற்பட்டது. 1989 ஆம் ஆண்டு ஜா, ஜெ வாக பிரிந்து நின்றதால் திமுக இமாலய வெற்றியைப்பெற்று (150 இடங்கள்) ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா தலைமையிலான அணி 27 இடங்களையும், ஜா அணி 4 இடங்களையும் பெற்றது. இது மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும்.

அதிமுக தலைவர்கள் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு
அதிமுக இனி இல்லை என்ற நிலையில் ஜெயலலிதா தான் அடுத்த தலைவர் என்கிற புத்திசாலித்தனமான முடிவை அதிமுகவின் அப்போதைய தலைவர்கள் எடுத்தனர். இன்றுள்ளதுபோல் இரட்டைத்தலைமை என எடுத்திருந்தால் திமுகவை சமாளித்து அதிமுக தலையெடுத்திருக்க முடியாது. இது தோல்வியிலிருந்து அதிமுக பெற்ற எழுச்சி எனலாம்.

காங்கிரஸை பகடைக்காயாக பயன்படுத்திய ஜெயலலிதா
ராஜிவ் காந்தி மூலம் காய்களை நகர்த்திய ஜெயலலிதா வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்த நிலையில் சந்திரசேகர் பிரதமராக ராஜிவ் ஆதரவுடன் பொறுப்பேற்ற நிலையில் திமுக ஆட்சியை கவிழ்க்க வைத்தார். ஒன்றரை ஆண்டுகளில் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் 1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக அதிமுக (164 இடங்கள்) இமாலய வெற்றியைப்பெற்றது. திமுக 2 இடங்களில் வென்றது. இது அதிமுகவின் விஸ்வரூப எழுச்சியாக இருந்தது.

கடுமையாக பெயரைக்கெடுத்துக்கொண்டு ஆட்சியை இழந்த அதிமுக
1991 ஆம் ஆண்டுமுதல் 1996 ஆண்டுவரை ஜெயலலிதா நடத்திய ஆட்சியினால் ஏற்பட்ட வெறுப்பை ரஜினிகாந்த், தமாகா மூலம் அறுவடை செய்தது திமுக. 167 இடங்களைப் பெற்று பெரிய வெற்றியை திமுக பெற்றது. அதிமுக 4 இடங்களில் மட்டுமே வென்றது. ஜெயலலிதாவே தோற்றுப்போனார். பல தலைவர்கள் கட்சியை விட்டு விலகி ஓடினர். இது அதிமுகவுக்கு பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்பட்டது. அதே ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக ஒரு இடத்தைக்கூட பெறாமல் பூஜ்யத்தை பெற்றது.

1996 ஆம் ஆண்டு உள்ளாட்சித்தேர்தலிலும் தோல்வி
1996 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த கையோடு தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தேர்தலை 10 ஆண்டுகளுக்குப்பின் நடத்தினார் கருணாநிதி. திமுக அபார வெற்றி பெற்றது. அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக இம்முறையும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து மெகா கூட்டணி அமைத்து 30 இடங்களையும் அதிமுக 15 இடங்களையும் வென்று மத்தியிலும் ஆட்சி அமைக்க ஜெயலலிதா உதவினார். இது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

1999 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வி, 2001 வெற்றி
1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக 10 இடங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. ஆனால் 2001 ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தனது நிலைப்பாட்டை மாற்றி மூப்பனாருடன் கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப்பிடித்தார் ஜெயலலிதா. இதன்மூலம் அதிமுக மீண்டும் எழுச்சிப்பெற்றது.

2004 ஆம் ஆண்டு மக்களவை படுதோல்வி
ஆனால் 2004 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு எதிராக பாஜகவுடன் கரம் கோர்த்த ஜெயலலிதா படுதோல்வி அடைந்தார். 39 இடங்களையும் திமுக கூட்டணி வென்றது. அதிமுகவுக்கு கிடைத்தது பூஜ்யம். மிகப்பெரிய வீழ்ச்சியாக இது பார்க்கப்பட்டது. மத்தியிலும் திமுக ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தது. இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது.

2006 சட்டப்பேரவை தேர்தலிலும் வீழ்ச்சி
விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டதால் அதன் பாதிப்பு அதிமுக, திமுகவுக்கு இருந்தாலும் திமுக கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியைப்பிடித்தது. அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 2006 ஆண்டு உள்ளாட்சித்தேர்தலிலும் அதிமுக வீழ்ச்சியைச் சந்திதது. மொத்தம் உள்ள 152 நகராட்சிகளில் தி.மு.க. கூட்டணி 129 நகராட்சி தலைவர்கள் பதவியை கைப்பற்றியது. அதிமுக 17 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் ஆறுதலான வெற்றியைப்பெற்ற அதிமுக 6 மாநகராட்சிகளிலும் தோல்வியை தழுவியது. சென்னையில் 4 வார்டுகளில் மட்டுமே வென்றது. இனி அதிமுக அவ்வளவுதான் என்கிற முடிவுக்கு வரும் வகையில் வீழ்ச்சி இருந்தது.
2011 சட்டப்பேரவையில் அமோக வெற்றி மீண்டும் எழுச்சி
2011 சட்டப்பேரவை தேர்தலில் 2 ஜி விவகாரம், திமுகவினர் மீதான அதிருப்தி காரணமாக திமுக மீது கோபத்திலிருந்த தேமுதிக மற்றும் இடதுசாரிகளுடன் மெகா கூட்டணி அமைத்த ஜெயலலிதா ஆட்சியைப்பிடித்தார். சூட்டோடு சூடாக உள்ளாட்சித்தேர்தலை நடத்தி பெரும்பாலான இடங்களில் அதிமுக அமோக வெற்றிப்பெற்றது. 10 மாநகராட்சிகளையும் மொத்தமாக அதிமுக கைப்பற்றியது. இது அதிமுக எழுச்சிப்பெற்ற காலம்.

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெருவெற்றி, 2016 தொடர் வெற்றி
2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மோடி அல்ல இந்த லேடி என சொல்லி அடித்து 39 இடங்களில் 37 இடங்களை கைப்பற்றினார் ஜெயலலிதா. சூட்டோடு சூடாக 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் புதுவியூகம் அமைத்து மீண்டும் வெற்றிப்பெற்று ஆட்சியைப்பிடித்து இம்முறை 89 இடங்களை மட்டுமே திமுக பெற முடிந்தது. இது அதிமுகவின் எழுச்சியாகவும் தொடர் வெற்றியாகவும் கொண்டாடப்பட்டது.

2017 ஜெயலலிதா மரணம், அதிமுக உட்கட்சி மோதல்
ஜெயலலிதா மரணத்திற்கு பின் ஓபிஎஸ்- சசிகலா, மோதல் வந்து ஆட்சியை எடப்பாடியிடம் ஒப்படைத்துவிட்டு சசிகலா சிறைச் செல்ல ஓபிஎஸ்-இபிஎஸ் இணைய, இங்குதான் ஒற்றைத்தலைமை இரட்டைத் தலைமையாக மாறியது. முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்டாலும் கட்சிக்குள் ஓபிஎஸ்-இபிஎஸ் பூசலும், பாஜக ஆதரவு நிலைப்பாடும் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஒரே ஒரு மக்களவை தொகுதியோடு சுருங்கிப்போனது அதிமுக.

எழவே முடியாத வீழ்ச்சியா?
எம்ஜிஆர் காலத்தில், ஜெயலலிதா காலத்தில் எழுச்சியையும் வீழ்ச்சியையும் மீண்டும் எழுச்சியையும் தொடர் வெற்றியையும் அதிமுக பெற்றுள்ளது. ஆகவே அதிமுக இதையும் கடந்து மீண்டும் எழுச்சி பெறும் என்கிற வாதம் வைக்கப்படுகிறது. இதை ஒரே ஒரு நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்ளலாம் என சில அரசியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா கவர்சிகர தலைவர்கள், ஒற்றைத்தலைமையின் கீழ் இது சாத்தியமானது ஆனால் இப்போது அப்படிபட்ட நிலை இல்லை என்கின்றனர்.

எங்கே பிரச்சினை..எழுமா அதிமுக
இதைவிட முக்கியமான பிரச்சினை இதுபோன்று தொடர் தோல்வியை அதிமுக இதற்கு முன் சந்தித்தது இல்லை, மக்களவையில் தோல்வியா சட்டப்பேரவையில் வெற்றி, அல்லது உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி, 1996 ஆம் ஆண்டில் கடுமையான மக்களின் கோபத்தை சந்தித்தும் 1998 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வீறுகொண்டு எழுந்தது அதிமுக என்ற வாதம் வைக்கப்படுகிறது. அதை நிராகரிக்க முடியாது. எங்கே தவறு நேர்ந்தது

மறுக்க முடியாத அரசியல் ஆர்வலரின் கருத்து
இதுகுறித்து கருத்து தெரிவித்த அரசியல் ஆர்வலர் ஒருவர் கூறியதாவது "ஜெயலலிதா மரணத்திற்கு பின் சசிகலா தலைமையின் கீழ் கட்சி வந்தது. வழக்கம் போல் தலைவர்கள் சசிகலாவிடம் அதே பவ்யம் விசுவாசத்தை காட்டினர். பின்னர் ஓபிஎஸ் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். சசிகலா சிறை செல்ல நேர்ந்ததால் எடப்பாடி முதல்வராக்கப்பட்டார். அதுநாள்வரை எடப்பாடி பழனிசாமி பெரிதாக அரியப்பட்ட தலைவரில்லை. ஆனால் அவர் முதல்வரானார். அதன் பின்னே பல கதைகள் பேசப்பட்டது.

வலுவில்லாத தலைமை
ஆனால் வலுவில்லாத தலைமைப்பண்பை கொண்ட ஒருவரை அதிமுகவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பில் சசிகலா அமர்த்திவிட்டு சிறைச் சென்றது எவ்வளவு தவறான முடிவு என்பதை பின்நாளில் சசிகலா உணர்ந்தார். டெல்லி மேலிட சமாதானம் மூலம் நிராகரிக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைப்பாளர் ஆனார். சசிகலா ஒதுக்கப்பட்டார். இது மேலுக்கு சமாதானம் நீருபூத்த நெருப்பு அதிமுகவுக்கு சிக்கல் என பலரும் சொன்னார்கள். அது உண்மைதான் என்றானது.

ஜெயலலிதாவின் பாதையை மறந்தார்கள்
அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை எளிதாக தமிழகத்திற்குள் அனுமதித்தார்கள். தமிழக மக்கள் எதிர்க்கும் விஷயங்கள் பற்றி கவலைப்படாமல் ஆதரித்தார்கள் இவையெல்லாம் அதிமுக மக்களிடமிருந்து அந்நியப்பட வழிவகுத்தது. மத்திய அரசின் திட்டங்களை கண்மூடித்தனமாக ஆதரித்தது அதிமுகவின் அடிப்படைக்கே பாதகமாக அமைந்தது.

திமுக எதிர்ப்பே அதிமுகவின் பலம்...
அதிமுக பொதுவான கட்சி, ஆனால் இரண்டு தலைவர்களுமே அவர்கள் சார்ந்த சமூகத்தின் தலைவர்கள்போல் காட்டிக்கொண்டார்கள். கவலைப்படாமல் கட்சிக்குள் கோஷ்டிகளை வளர்த்தார்கள், 65 இடங்களை மட்டுமே பெற்றது குறித்து பரிசீலிக்காமலே அதே பாதையில் சென்றனர். திமுக எதிர்ப்புதான் அதிமுகவின் அடிப்படை. ஆனால் திமுக தலைவர்களை பாராட்டுவதும், மக்களுக்கான எதிர்ப்பு போராட்டங்களை நடத்தாமல் அறிக்கை மட்டுமே விட்டு அரசியல் நடத்தியதும் முக்கிய காரணம்.

திமுகவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கோட்டைவிட்ட அதிமுக
சமீபத்திய நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு முன்னர் பொங்கல் பரிசுத்தொகையை திமுக வழங்கவில்லை, மகளிருக்கு வழங்குவதாக அறிவித்த 1000 ரூபாயையும் வழங்கவில்லை. இவைகளுக்கு எதிராக அதிமுக என்ன போராட்டம் நடத்தியது. பிரச்சாரத்தில் என்ன கொண்டுச் சென்றார்கள் என்றால் பூஜ்யம். பாஜகவிடம் பெரிய கட்சியான அதிமுக அடிபணிவதும், பாஜக கூட்டணி இல்லை என அறிவிப்பதையும் அதற்கு அதிமுக தலைவர்கள் ரியாக்ஷனையும் மக்கள் கவனிக்கத்தான் செய்தார்கள்.

அதிமுக கொள்கையை கைவிட்டு பாஜக கொள்கையை கையிலெடுத்த எடப்பாடி
அதே நேரம் ஒரே நாடு ஒரே தேர்தல் என பாஜக கொள்கையை எடப்பாடி பழனிசாமி பல கூட்டங்களில் பேசினார். ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் ஒரு கட்சியின் ஆட்சியை கலைப்போம் என்று முன்னாள் முதல்வர் பேசுவது மாநில சுயாட்சிக்கு எதிரானது. அது பாஜகவின் கொள்கை, அதை அதிமுக தலைவர் பேசுவது சரியாக இருக்காது அல்லவா? இவையெல்லாம் தான் அதிமுக தோல்விக்கு காரணம்.

கடந்த கால வரலாறுகளை நினைத்து பரிசீலியுங்கள்
இப்போதும் அதிமுக மீண்டு எழ முடியும். கடந்தகால வரலாறுகள் அதைத்தான் சொல்கின்றன. ஆனால் அப்போதிருந்த தலைவர்களோ, கட்சிக்கட்டுப்பாடோ இப்போது இல்லாத நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு விழும் வாக்குகளை கவர மாநில கொள்கைகள் சார்ந்து இயங்குவது முக்கியம், இல்லாவிட்டால் திமுக எதிர்ப்பு வாக்குகள் இனி இரட்டை இலைக்கு விழாமல் அடுத்தக்கட்சிகளுக்கு விழும், இது அதிமுகவுக்கு முதல் தடவை அல்ல மீண்டும் வீறுகொண்டு எழ உரிய முயற்சி என்ன என்பதை கண்டு உடனடியாக செயலில் இறங்கவேண்டும்" என்றார்.

இதுதான் யதார்த்தம் சிந்திப்பார்களா?
சரியான கருத்துதான் அதிமுக தலைவர்கள் இனியும் பரிசீலனை செய்யாமல் இதேப்போக்கில் தொடர்ந்தால் தமிழகத்தில் தேயும் கட்சியாக அதிமுக மாறிவிடும். வீழ்ச்சியை மாற்றி எழுச்சியாக பல முறை வென்றுக்காட்டிய அதிமுக மீண்டு எழாமல் போய்விடும் என்பது யதார்த்தமான மறுக்க முடியாத உண்மை.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications