சரோஜாதேவிக்கு மது கொடுத்த சக நடிகை.. ஷூட்டிங்கில் விஷயம் தெரிந்ததும் எம்.ஜி.ஆர் செய்த காரியம்
சென்னை: 1960 - 70 களில் தென்னிந்திய சினிமாக்களில் கொடி கட்டி பறந்த நடிகை சரோஜா தேவி நேற்று பெங்களூரில் காலமானார். அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், சரோஜாதேவி பற்றிய சுவாரசிய தகவல்களும் வெளி வருகின்றன. எம்.ஜி.ஆருடன் நடித்த படத்தின் போது, சரோஜாதேவிக்கு ஒரு துணை நடிகை மதுவை கொடுக்க முன் வந்ததாகவும், அப்போது இதை பார்த்த எம்.ஜி.ஆர் கடுமையான கோபத்திற்கு ஆளான சம்பவமும் நடைபெற்று இருக்கிறது. இது பற்றி சரோஜாதேவியே கூறியதை இங்கு பார்க்கலாம்.
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார். 87 வயதான சரோஜாதேவி 1960 - 70 களில் தென்னிந்திய சினிமாக்களில் கொடி கட்டி பறந்தார். குறிப்பாக தமிழ் சினிமாக்களில் இவர் இல்லாத படமே இல்லை என சொல்லும் அளவுக்கு சரோஜாதேவி முன்னணி நடிகையாக இருந்தார்.

சரோஜாதேவிக்கு மது
எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் மட்டும் 50 க்கும் மேற்பட்ட படங்களில், சரோஜாதேவி நடித்து இருக்கிறார். சரோஜாதேவி சினிமாவில் நடித்த காலத்தில் அவரது நடிப்பில் காட்டிய திறமை, ஒழுக்கம் உள்ளிட்டவை பற்றிய பல சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், எம்.ஜி.ஆருடன் நடித்த படத்தின் போது, சரோஜாதேவிக்கு ஒரு துணை நடிகை மதுவை கொடுக்க முன் வந்ததாகவும், இதை பார்த்த எம்.ஜி.ஆர் கடுமையான கோபத்திற்கு ஆளான சம்பவமும் நடைபெற்றுள்ளது. இது பற்றி சரோஜாதேவி கடந்த 1987 ஆம் ஆண்டு ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நடிகையை திட்டிய எம்ஜிஆர்
அரச கட்டளை படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடைபெற்றது. அங்கு கடுமையான குளிர் நிலவியது. இந்த குளிரை சமாளிக்க சக நடிகை ஒருவர் மது கொடுத்தார். இதை குடித்தால் குளிரை சமாளிக்க கூடிய அளவுக்கு வெப்பமாக உனர முடியும் என்றார். இதை கவனித்த எம்.ஜி.ஆர், அந்த நடிகையை கடுமையாக கடிந்து கொண்டார். எம்.ஜி.ஆரிடம் திட்டு வாங்கியதில் அந்த நடிகைக்கு, ஊட்டி குளிரிலும் வியர்த்துவிட்டது" என்றார்.
எம்.ஜி ஆரும் சரோஜாதேவியும் 25 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இதில், 23 படங்கள் வசூலை வாரி குவித்தது. 1967 ஆம் ஆண்டு சரோஜாதேவிக்கும் எம்.ஜி.ஆருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை. பெங்களூரில் சரோஜாதேவி செட்டில் ஆகிவிட்ட நிலையில், அவரது கணவர் மறைவுக்கு நேரில் சென்று எம்.ஜி.ஆர் ஆறுதல் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதாவுடன் நட்பு
அதேபோல, சரோஜாதேவியின் வளர்ப்பு மகள் திருமணத்திலும் கலந்து கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளில் தொலைபேசியில் அழைத்து எம்.ஜிஆர் வாழ்த்து தெரிவிப்பார் என்று சரோஜாதேவி கூறியுள்ளார். அதேபோல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் நட்பாக பழகிவந்தவர், சரோஜாதேவி.
ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சரோஜாதேவி, ''முதல்வர் ஆன பின்பும், என்னுடன் எப்போதுமே நட்புடன் பழக கூடியவர் ஜெயலலிதா. என்னுடைய 'புதிய பறவை' படத்தை அடிக்கடி பார்த்து ரசிப்பார். மிகவும் பிடித்த படம் என்று என்னிடம் கூறியுள்ளார்.
சினிமா வரலாற்றையே மாற்றியவர்
ஒருமுறை அவர் என்னிடம், 'நீங்கள் இப்போது உச்சத்தில் இருக்கிறீர்கள். எக்காரணம் கொண்டும் அந்த இடத்தில் இருந்து இறங்கி விடாதீர்கள். சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்காதீர்கள். இப்போது எப்படி இருக்கிறீர்களோ, அதுபோல கடைசிவரை இருக்கவேண்டும்', என்று என்னிடம் அறிவுறுத்தினார். அதை என்னால் மறக்கவே முடியாது'' என்று குறிப்பிட்டார்.
சரோஜாதேவி படப்பிடிப்புக்கு நேரம் தவறாமல் வந்துவிடுவதை மிகப்பெரிய கொள்கையாகவே வைத்திருந்தார். எப்போதாவது உடல்நலம் சரியில்லாமல் போனால்கூட, அதிகபட்சமாக 2 மணி நேரம் கழித்து வந்துவிடுவாராம். திருமணத்துக்கு பிறகும் கணவர் அனுமதியுடன் தொடர்ந்து படங்களில் நடித்து அசத்தினார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற சினிமாவின் இலக்கணத்தை உடைத்தெறிந்து, சினிமா வரலாற்றையே மாற்றி அமைத்தார் சரோஜாதேவி.












Click it and Unblock the Notifications