எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி
சென்னை: 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த எம்.ஜி.ஆர், அந்த ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி மு.கருணாநிதி பிறந்தநாளுக்கு வாழ்த்துச் செய்தி கூறியது பெரும் சலசலப்பை உண்டாக்கியது.
இந்திரா காந்தி எமர்ஜென்சி நடைமுறைப்படுத்திய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்தது. 1976 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மு.கருணாநிதியின் ஆட்சியைப் பதவிநீக்கம் செய்யப்பட்டது. "நாட்டிலேயே தமிழ்நாடும் குஜராத்தும் தனித் தீவுகளாக இருக்கின்றன" என்று அப்போது இந்திரா காந்தி காரணம் கூறினார்.

பின்னர் புதிய நண்பர் எம்.ஜி.ஆருடன் இணக்கம் காட்டிவந்த இந்திரா காந்திக்கு இந்தப் புதிய அரசியல் கூட்டும் கசந்துபோனது. உடனே பிப்ரவரி 17 ஆம் தேதி 1980 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற கசப்பு மாத்திரையைத் தந்தார். ஏனெனில் 1980இல் நடைபெற்ற நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து களம் கண்ட அவர் ஆட்சிக்கு வந்ததும் எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கலைத்தார். தமிழ்நாடு மறுபடியும் ஒரு சட்டமன்ற தேர்தலுக்குத் தயாரானது.
38.8% ஆக உயர்ந்த அதிமுக
ஆனால், இந்திரா காந்தி விஷயத்தில் விதி வேறு மாதிரி விளையாடியது. அதிமுக 80இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 129 இடங்களில் வெற்றிபெற்றது. திமுக 37 இடங்கள் என்றளவில் சுருங்கியது. அதனுடன் கூட்டணியிலிருந்த காங்கிரஸ் (ஐ) 31 இடங்களில் வென்றது. ஜனதா கட்சி 2 தொகுதிகளைப் பிடித்தது. சிபிஐ 9, சிபிஎம் 11 இடங்களை உறுதிசெய்தன. இந்தத் தேர்தலில் காந்தி காமராஜ் காங்கிரஸ் 6 தொகுதிகளில் வென்றது.
கருணாநிதி அண்ணா நகரில் நின்று 51,290 வாக்குகளைப் பெற்று தன்னை எதிர் வேட்பாளர் ஹெச்.வி. ஹன்டேவை தோற்கடித்தார். எம்.ஜி.ராமச்சந்திரன் மதுரை மேற்குத் தொகுதியில் களம் கண்டு 57,019 வாக்குகளை அள்ளி, தன்னை எதிர்த்து நின்ற பொன் முத்துராமலிங்கத்தைத் தோற்கடித்தார். அவர் 35,953 வாக்குகளைப் பெற்றிருந்தார். 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத்தேவரிடம் தோல்வியைப் பரிசாகப் பெற்றவர் மறுபடியும் வீழ்ந்தார்.
புரசைவாக்கம் தொகுதியை விடாமல் பிடித்து வைத்திருந்த க. அன்பழகன் 52,729 வாக்குகளைப் பெற்றதுடன் நட்சத்திரப் பேச்சாளரான அதிமுக வேட்பாளர் வலம்புரி ஜானை (47,021) வீழ்த்திக் காட்டினார். இத்தேர்தலில் அதிமுக 38.8% வாக்குகளைப் பெற்றது. முந்தைய தேர்தலில் இது 30.4% ஆக இருந்தது. அதேவேளையில் 1949இல் தொடங்கப்பட்ட திமுகவின் வாக்குகள் 22.5% ஆகச் சரிந்தது.
மே மாதம் தேர்தல் வெற்றிக்குப் பின் ஜூன் 3 ஆம் தேதி மு.கருணாநிதிக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டார் எம்.ஜி.ஆர். அது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது எனச் சிலாகித்தனர் ரத்தத்தின் ரத்தங்கள். அவரைச் சந்தித்த பத்திரிகையாளர், "கருணாநிதி உங்களுடன் சேர முன் வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா" என்று கேட்டிருந்தார். அதற்கு அவர், "துப்பறியும் அதிகாரியும் திருடனும் ஒன்றாக கம்பெனி நடத்த முடியுமா?" என்று கூறினார்.
இந்த மனப்போக்கை 'கல்கி' தலையங்கம் எழுதிக் கண்டித்தது. அதற்குப் பதிலளித்த கருணாநிதி, "துப்பறிபவன் என்று என்னைத்தான் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டார்" என்று சமாளித்தார். ஆனால், செய்தியாளர் விடவில்லை, "கருணாநிதியைத்தான் திருடன் எனக் குறிப்பிட்டதாக எம்.ஜி.ஆர் விளக்கியுள்ளாரே" என்று கொக்கி போட்டார். "திருடனுக்குத் துப்பறியும் அதிகாரி இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூறினால் நாளை அரசாங்கம் எப்படி நடக்கும்?" என்று எதிர் துடுப்பைப் போட்டார் மு.க.
கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை
இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நடந்த பிறந்தநாள் விழா மேடையில் மு.கருணாநிதி பேசிய பேச்சு இன்றைக்கும் காலத்தைத் தாண்டி அவரை வாழ்த்துவதற்காகவும் வீழ்த்துவதற்காகவும் பயன்பட்டு வருகிறது என்பது ஒரு நகை முரண். அப்படி என்னப் பேசினார்?
"தமிழர்களே, நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக மிதப்பேன் - அதில் நீங்கள் ஏறிச் சவாரி செய்யலாம். என்னை நீங்கள் நெருப்பிலே தூக்கி எறிந்தாலும் நான் விறகாக மாறி அடுப்பெரிக்கப் பயன்படுவேன். நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம்.
என்னை நீங்கள் பாறையிலே மோதினால் வெறும் கல்லைப்போல் பொடியாகிவிடமாட்டேன். தேங்காய் சிதறுவதுபோல் சிதறி உங்களுக்குத் தின்கிற பண்டமாக மாறுவேன். ஆகவே, தமிழர்களே, தமிழர்களே! என்னை நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். உங்களுக்காகவே பயன்படுவேன். எத்தனை தோல்விகளைத் தந்தாலும் நான் உங்கள் வீட்டு நாய். நன்றியை எதிர்பார்த்துத்தான் நான் நடை போடுகிறேன் என்று நீங்கள் யாரும் எண்ண வேண்டாம்" என்று உடன்பிறப்புகள் விழிகளில் நீர் கசிய வைக்கும் அளவுக்கு உருக்கமாகப் பேசினார்.
அவரது பேச்சை அவரது எதிரி பத்திரிகைகள் கூட பாராட்டின. கூடவே, "என் ஆட்சிக்காலத்திலே நடக்கக் கூடாத தவறுகள் பல நேர்ந்து விட்டிருக்கின்றன. மக்களின் மன்னிப்பை வேண்டுகிறேன்" என்று அவர் அலங்காரமற்ற வகையில் சொல்ல மாட்டாரா என்றுதான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்" என்று எழுதின.
எம்.ஜி.ஆர் தொடர்ந்து இடைத் தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்து வந்த வேளையில்தான் கருணாநிதி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அதில் அவர், "இடி அமீன் ஆட்சியில் இடைத் தேர்தல் எதற்கு?" எனக் கவிதைப் படித்து தன் கட்சிக்காரர்களைக் குதூகலம் அடையச் செய்தார். அவர் தோல்வியடையும் போது எல்லாம் தொண்டர்கள் துவண்டு போகாமல் இருக்க மருந்துகளை தன் எழுத்துகள் வழியே ஊட்டிக்கொண்டே இருந்தார். அதை ஒன்றைத்தான் அவரால் செய்ய முடிந்தது.
இந்த 1980 தேர்தலில் எம்.ஜி.ஆர் 11 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். அந்தளவுக்கு திமுக கூட்டணி வலுவாக இல்லை. அக்கட்சியுடன் கூட்டணிக்குப் பலர் தயாராக இல்லை என்பது முக்கிய காரணம். திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முதல்நாள் பழக்கடை பாண்டியன் அ.இ.அ.தி.மு.கவில் இணைந்தார். எம்.ஜி.ஆர் 129 இடங்களைப் பிடித்து மீண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
ஆர்.வெங்கட்ராமனுக்கும் ஜி.கே.மூப்பனாருக்கும் இடையே பெரிய அளவில் உட்கட்சிப் பூசல் இருந்ததால், ஒழுங்காகத் தேர்தல் பணிகள் நடைபெறவில்லை. கருணாநிதி கூட்டணியை மக்கள் புறக்கணித்தனர்.
எழுதியவர்: கடற்கரய்












Click it and Unblock the Notifications