1976ல் எம்ஜிஆர் எடுத்த முடிவு?; இறங்கி வந்த ஜெ!; ஏற்க மறுக்கும் எடப்பாடி! கரைசேருமா அதிமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தால் படுதோல்வியைச் சந்திக்க நேரிடும் என்பது பாமரனுக்குக் கூட தெரியும் என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா ஒரு புள்ளிவிவரத்தை முன்வைத்து விளக்கம் அளித்திருக்கிறார்.

பல திசைகளில் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணையுமா? என்ற விவாதங்கள் நடைபெற்று வந்த சூழ்நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இதில் மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாஜகவுக்கு எதிரான தீர்மானமும் அதில் அடங்கும்.

Edappadi Palaniswami AIADMK

இந்தச் செயற்குழு அதிமுகவுக்குள் என்ன மாற்றத்தைக் கொண்டு வரும்? அதிமுக மீண்டும் பலம் பெற எடப்பாடி பழனிசாமி தலைமையே போதுமா? அதைத் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டார்களா? எனப் பல்வேறு கேள்விகளுக்கு அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் காலத்திலிருந்தே கவனித்து எடைபோட்டு வரும் பத்திரிகையாளர் துரை கருணா விளக்கம் அளித்துள்ளார்.

இது பற்றி துரை கருணா, “அதிமுக என்ற கட்சி தொடங்கப்பட்டது முதல் கிட்டத்தட்ட 52 ஆண்டுகளாக அக்கட்சியின் செயல்பாடுகளைப் பற்றி மிக நெருக்கமாக நான் கவனித்து வந்திருக்கிறேன். அதனடிப்படையில் இந்த அவசர செயற்குழு ஒரு சம்பிரதாயமாகவே இருக்கும். அதில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என்றே சொல்லி இருந்தேன். ஏறக்குறைய நான் கணித்ததைப்போலவே ஒரு வழக்கமான செயற்குழு கூட்டமாகவே இது நடந்து முடிந்துள்ளது.

கடந்த 9 ஆம் தே மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என அதிமுக தலைமை அறிவித்தது. இடையில் திடீரென்று அதை ரத்து செய்துவிட்டு, அவசர செயற்குழு கூட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் செயற்குழுவில் பாஜக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு போதுமான அளவு நிதியை ஒதுக்கவில்லை. மத்திய அரசு பாராமுகமாக உள்ளதைக் கண்டித்து ஒரே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். வழக்கமாக 18 தீர்மானங்களை வரை நிறைவேற்றுவார்கள்.

இம்முறை 9 தீர்மானங்கள் என அதைச் சுருக்கிவிட்டார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகின்ற 2026 தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்ற தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறார்கள். 2026 எடப்பாடி தலைமையில் அதிமுக தேர்தல் களத்திற்குச் சென்றால் அந்தக் கட்சி வெற்றி பெறாது என்பதைப் பாமரர் கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து.

Edappadi Palaniswami AIADMK

அதிமுகவின் அடிப்படைக் கொள்கையே திமுக எதிர்ப்புதான். ஆனால், அந்த எதிர்ப்புணர்வு சில ஆண்டுகளாகத் தணிந்துபோய்விட்டது. ஆகவேதான் அதிமுக இடத்தை பாஜக எடுத்துக் கொண்டுள்ளது. விக்கரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்திற்கு காலங்காலமாக வாக்களித்து வந்த 50 ஆயிரம் பேர் உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்த திமுக எதிர்ப்பு என்பது இன்றைக்கு குறைந்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.

எடப்பாடி பழனிசாமி அடிக்கடி 2 கோடிக்கு மேல் தொண்டர்கள் கட்சியில் உள்ளதாகச் சொல்கிறார் இல்லையா? அதில் 1 கோடிக்கு மேலான தொண்டர்கள் மக்களவைத் தேர்தலில் ஓட்டுப் போடவே போகவில்லை. எடப்பாடி பழனிசாமி எடுத்த கூட்டணி முடிவு மீது அதிருப்தியிலிருந்ததால்தான் இவ்வளவு தொண்டர்கள் வாக்குச்சாவடிக்கே வரவில்லை. சில லட்சங்களிலிருந்த தொண்டர்களின் எண்ணிக்கையைக் கோடியில் உயர்த்தியவர் ஜெயலலிதா. அவரே கூட கட்சியை விட்டு வெளியேறியவர்களைத் திரும்பக் கட்சிக்கு வர அனுமதித்து ஏற்றுக் கொண்டார்.

1976இல் மாநிலக் கட்சியாக இருந்த அதிமுகவை எம்ஜிஆர் தேசிய கட்சியாக மாற்றினார். அப்போது அதிமுக கொடியைக் கையில் தொண்டர்கள் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவித்தார். அதை அதிமுகவிலிருந்த மூத்த தலைவர்களான மறைந்த கோவை செழியன், இப்போதும் இருக்கின்ற விஐடி விஸ்வநாதன், இந்திரகுமாரி, விருதுநகர் சீனிவாசன் போன்றவர்கள் பொதுக்குழுவிலேயே எம்ஜிஆருக்கு முன்பாகவே எதிர்த்துப் பேசினார்கள். எம்ஜிஆர் எடுத்த முடிவே சரி என்று காளிமுத்து, எஸ்டி சோமசுந்தரம்,சைதை துரைசாமி எனப் பலர் சொன்னார்கள். கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவானது. பிறகு பிரிந்து சென்றவர்களை மூன்றே மாதத்தில் கட்சிக்குள் மீண்டும் இணைத்தார் எம்ஜிஆர்.

இப்படித்தான் 1984இல் எம்ஜிஆருக்கு எதிராக எஸ்டி சோமசுந்தரம் 'நமது கழகம்’ என்று கட்சியை தொடங்கினார். அவரையும் கூட எம்ஜிஆர் கட்சியில் மீண்டு இணைத்துக் கொண்டார். இதே போல் ஜெயலலிதா கட்சியை விட்டுச் சென்ற பலரை மீண்டும் இணைத்துக் கொண்டார். அந்த அரவணைக்கும் பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. அதுதான் கட்சியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இதை இன்று வரை எடப்பாடி உணரவே இல்லை.

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய மூவரும் அதை உணர்ந்துதான் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று இறங்கி வருகிறார்கள். அதை ஏற்கக்கூடிய நிலையில் எடப்பாடி இல்லை. அவர் 2024இல் மெகா கூட்டணி அமைப்போம் என்றார். ஆனால், அவரை நம்பி ஒரு கட்சியும் வரவில்லை. பாஜகவை நம்பி போனார்களே ஒழிய அதிமுகவை நம்பவில்லை. அதற்குக் காரணம் எடப்பாடி. இதே நிலை நீடித்தால் 2026இல் இவரால் ஒரு வலிமையான கூட்டணியை அமைக்கவே முடியாது.

அதிமுகவுக்கும் திமுகவுக்குமான வெற்றி விகிதாச்சாரம் குறைந்த பட்சம் 1% ஆகவும் அதிக பட்சம் 3% ஆக உள்ளது. அதே சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூவரிடமும் 4 முதல் 7% வாக்குகள் மத்திய மற்றும் தென் மண்டலங்களில் உள்ளது. வெறும் பாலா பழத்தை வைத்துக் கொண்டு 12 நாட்களில் மூன்றரை லட்சம் வாக்குகளை ஓபிஎஸ் வாங்கியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதா காலத்து அதிமுக தொண்டர்கள் 80% பேர் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இப்போது உள்ளனர். தஞ்சையில் 70% பேர் உள்ளனர். சிவகங்கை,ராமநாதபுரத்தில் 50% பேர் உள்ளனர். அப்படி ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 30% அதிமுகவினர் எடப்பாடிக்கு எதிரான அதிமுக அணியில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா மீண்டு கட்சிக்கு வரும் காலத்தில்தான் அதிமுகவுக்குள் வருவார்கள். எடப்பாடி பழனிசாமியால் இந்த 30% தொண்டர்களைக் கட்சிக்குள் இழுத்து வரும் திறமை, ஆற்றல் இல்லை" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+