மைக்ரோசாப்ட் உடன் கைகோர்க்கும் தமிழக அரசு.. மாணவர்கள் எதிர்காலத்தை காக்க கலக்கல் திட்டம்.. வாவ்
சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து புதியதொரு திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கடந்தாண்டு உலகில் நடந்த மிகப் பெரிய மாற்றம் என்றால் அது ஏஐ துறையில் நடந்த மாற்றம் தான்.. ஏஐ ஒன்றும் கடந்தாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது இல்லை.. பல ஆண்டுகளாகவே ஏஐ சார்ந்த ஆய்வுகள் நடந்தே வருகிறது.

ஆனால், இந்தளவுக்கு நாம் வலிமையான ஏஐ மாடல்களை பார்த்தே இல்லை எனச் சொல்லலாம். கடந்தாண்டு சாட் ஜிபிடி அடைந்த வெற்றி பல ஏஐ மாடல்களின் வளர்ச்சிக்கு வித்திட்டது.
ஏஐ மாடல்: அதன் பிறகு பிஸ்னஸ், சுகாதாரம், டெக் என பல்வேறு துறைகளில் புது ஏஐ நிறுவனங்கள் வந்தன. இந்த ஏஐ மாடல்கள் மூலம் மனிதர்களுக்கு மிக பெரிய நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பல ஆண்டுகளால் மருத்துவர்களால் கண்டறிய முடியாத நோய்களை சில நொடிகளில் ஏஐ மாடல் கண்டுபிடித்த சம்பவம் எல்லாம் இங்கே நடந்துள்ளது. இந்த ஏஐ மாடல்கள் மனிதர்களை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேநேரம் இந்த ஏஐ மாடல்கள் மனிதர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தையும் தரலாம் என்று ஒரு தரப்பினர் எச்சரிக்கின்றனர். அதாவது இந்த ஏஐ மாடல்களால் பெரியளவில் வேலையிழப்பு ஏற்படலாம். இது மிகப் பெரிய நெருக்கடி ஏற்படுத்தும் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். அதேநேரம் தற்போது இருக்கும் வேலைகள் போனாலும் கூட பல புதிய வேலைகள் உருவாகும் என்று மற்றொரு தரப்பினர் சொல்கிறார்கள்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்த தமிழக அரசு: வரும் காலத்தில் ஏற்படும் அந்தச் சூழலுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும் என்ற குரல்கள் இப்போதே எழுந்துவிட்டன. இதற்கிடையே தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றல் ஆதரவை விரிவுபடுத்த, தமிழக பள்ளிக் கல்வித் துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
முதற்கட்டமாக மூன்று மாவட்டங்களில் உள்ள 14 பள்ளிகளில் இந்த முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், மேலும் 100 பள்ளிகளுக்கு இது விரிவுபடுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு HTML, C++, Python, கேம் டெவலப்மென்ட் மற்றும் ஏஐ ஆகியவற்றை கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இது மாணவர்களுக்கு மிகப் பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை
நாட்டிலேயே முதல்முறை: இந்தியாவிலேயே முதன்முறையாக இப்படியொரு முயற்சி தொடங்கப்படுகிறது.. 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இத்திட்டம் மூலம் பயனடைவார்கள். நடப்பு கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து பயிற்சி பெற்று வரும் தமிழக பள்ளி ஆசிரியர்கள் இப்போது இந்த TEALS குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் இதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது.
அடுத்த 5-10 ஆண்டுகளில் ஏஐ வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் இதன் மூலம் ஏஐ துறைகளில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். மாணவர்களை அந்த சூழலுக்கு தயாரிக்கும் வகையில் இந்தத் திறன்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது என்று மைக்ரோசாப்டின் டேட்டா மற்றும் ஏஐ இயக்குநர் செசில் எம்.சுந்தர் கூறினார்.












Click it and Unblock the Notifications