"ஆசிரியர்களை எச்சரிக்கிறேன்.." மகாவிஷ்ணு சர்ச்சை.. ஆவேசம் காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்ற நபர் பிற்போக்குத்தனமான கருத்துகளைப் பேசியது சர்ச்சையான நிலையில், இன்று அதே பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். மகாவிஷ்ணு கருத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்பிய தமிழ் ஆசிரியர் சங்கரை மேடைக்கு அழைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டினார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்ற நபர் கலந்து கொண்டு உரையாற்றினார். முன்ஜென்மம் குறித்தெல்லாம் பிற்போக்குத்தனமான கருத்துகளை அவர் பேசினார்.

அவரது பேச்சுக்கு அங்கிருந்த தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது மற்ற ஆசிரியர்கள் சங்கரை சமாதானம் செய்த நிலையில், மகாவிஷ்ணு தனது சர்ச்சை பேச்சைத் தொடர்ந்தார்.
பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்: இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பலரும் சம்பந்தப்பட்ட மகாவிஷ்ணு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே அதே பள்ளிக்கு நேரில் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் அங்கு மாணவர்களிடையே உரையாற்றினார். மேலும், மகாவிஷ்ணு பேச்சுக்குக் கேள்வி எழுப்பிய தமிழ் ஆசிரியர் சங்கரையும் அவர் மேடைக்கு அழைத்துப் பாராட்டினார்.
கேள்வி கேட்க வேண்டும்: அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் மேலும் பேசுகையில், "பள்ளிக்கூடத்தில் ஏன் என்று கேள்வி எழுப்ப வேண்டும். நமது ஆசிரியர்கள் அனைவரும் அறிவாளிகள் தான். ஆனால், இந்த கேள்வியை இப்போது கேட்க வேண்டுமா என்று நினைக்கிறார்கள். ஆனால், கேள்வியைக் கேட்கவில்லை என்றால் அது பிள்ளைகளுக்குப் பாதிப்பாக அமைந்துவிடும். நம்ம டீச்சரே கேட்கவில்லை. அப்போ சரியாகவே இருக்கும் என மாணவர்கள் தவறான பாதைக்குச் செல்ல நேரிடும்.
இதன் காரணமாகவே அவர் கேட்டுள்ளார். இது எப்படி சாத்தியம் பிற்போக்கு சிந்தனை கொண்டதாக இருக்கிறது என்று கேட்டு இருக்கிறார் சங்கர். அவரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இதன் காரணமாகவே அவரை மேடையில் அமர வைத்துள்ளேன். அவர் தமிழ் வாத்தியார். தமிழ் எப்போதும் கைவிடாது என்பதை மீண்டும் காட்டிவிட்டார். பிற்போக்கு சிந்தனை கொண்ட நபரிடம் இருந்து இவர் தான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அட்வைஸ்: நான் உட்பட யார் பேசினாலும் அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யார் சொன்னாலும் நீங்களே அதைச் சிந்தித்துப் பார்த்து எது சரி.. எது தவறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைத் தான் பெரியாரும் சொன்னார். யார் சொன்னாலும் உங்கள் அறிவை பயன்படுத்தி யோசியுங்கள் என்றார். பகுத்தறிந்து பார்த்து கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பள்ளிக்கு யார் வந்தாலும் அவர் யார்.. என்ன செய்துள்ளார் எனக் கேள்வி கேட்க வேண்டும். எல்லாவற்றுக்கும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கக்கூடாது. நீங்கள் வலிமையாக இருக்க வேண்டும்.
கல்வி தான் இங்கு யாராலும் திருட முடியாத சொத்தாகும். ஒரு மழை வெள்ளம் வந்தால் எல்லாமே அடித்துச் சென்றுவிடும். ஆனால், படித்தப் படிப்பு மட்டும் வீண் போகாது. சான்றிதழ் அடித்துச் சென்றாலும் உங்கள் அறிவும் கற்ற கல்வியும் விலகிப் போகாது. எந்த இடத்தில் இருந்தாலும் அறிவு உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
எச்சரிக்கை: ஆசிரியர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை விடுத்துக் கொள்கிறேன். இது வேண்டுகோளாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம். பள்ளி குழந்தைகள் எனது பிள்ளைகள்.. இங்கு யாரை அழைத்து வர வேண்டும் என்பதை அறிவை பயன்படுத்தி நாம் யோசிக்க வேண்டும். வரும் அனைவரையும் கூட்டி வரக்கூடாது. பேசும்போது சும்மா உணர்ச்சிவசப்பட்டுக் கைதட்டுவதில் எந்தவொரு பயனும் இல்லை. பள்ளிக்கு யாரை அழைக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச புரிதல் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். யார் என்ன சொன்னாலும் அதைப் பகுத்தறிந்து பாருங்கள். மார்க் அதிகம் பெற்றால் மட்டும் புத்திசாலி ஆகிவிட மாட்டோம். நல்லது கெட்டது எது என்பதைப் புரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications