"சூப்பர் முதல்வர்” கமெண்ட்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதில் கொடுத்த அன்பில் மகேஷ்!
சென்னை: எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர் தான் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு பதில் கொடுத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில், திமுக எம்.பி.க்கள் தன்னை வந்து சந்தித்து, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டு, பிறகு யாரோ ஒரு சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு எதிர்ப்பதாக, மக்களவையில் இன்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் பிஎம்.ஸ்ரீ திட்டம் பற்றி பேசியது என்ன என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், "பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து ஆலோசிக்க குழு அமைத்த பிறகே முடிவு என தெளிவாக கூறியிருந்தோம். நாட்டின் நம்பர் ஒன் முதல்வரான ஸ்டாலின் தான் சூப்பர் முதல்வர். கொள்கையை விட்டுவிட்டு பணத்தை பெற்றுக்கொள்வதில் என்ன பயன்? மத்திய அரசு நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். நாகரீகமற்றவர்கள் என்று மத்திய அரசு கூறியதில் இருந்தே அவர்களின் மனநிலை புரிகிறது.
தமிழ்நாட்டில் மாணவர்களை மந்தப்படுத்த மத்திய அரசு முனைகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதால் தான் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுகிறார்கள். தேசிய கல்விக்கொள்கையில் சில மாற்றங்கள் செய்ய சொல்லி கருத்துகளை அனுப்பினோம்.
புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் 3000 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் நிலைக்கு ஆளாவோம். அனைத்திலும் முதல் பரிசு பெறுவதால் தமிழக அரசை ஓட விடமாட்டேன் என்கிறார்கள். கல்வி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தி.மு.க எம்.பிக்களுக்கும் இடையே இன்று மக்களவையில் கடும் விவாதம் நடந்தது. மத்திய அமைச்சர் பேசியது, வேதனை அளித்ததாக திமுக எம்.பி கனிமொழி புகார் கூறினார். இதையடுத்து, தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
திமுக எம்.பி திருச்சி சிவா இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், "மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எல்லை மீறி பேசுகிறார். மும்மொழிக் கொள்கையில் எங்களுக்கு புரிதல் இல்லை என தர்மேந்திர பிரதான் பேசுவதற்கு அதிகாரம் இல்லை. முதல்வர் குறித்து தர்மேந்திர பிரதான் பேசியது ஏற்புடையது அல்ல. நாகரீகமற்றவர்கள் என தர்மேந்திர பிரதான் பேசியது கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications