முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு.. உடனே நாகைக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
சென்னை: நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை உடனடியாக நாகை செல்லுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து அவர் நாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரமடைந்து, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது இன்று மாலை புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் புயல் சனிக்கிழமை அன்று கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ளதன் காரணமாக கடலில் கடும் அலை சீற்றம் மற்றும் இடி, மின்னல் ஏற்படக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.
கனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் 8வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நம்பியார் நகர், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஃபைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்யப்பட்டுள்ளன. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை உடனடியாக நாகப்பட்டினம் செல்லுமாறும், அங்கு நிலவரங்களை ஆய்வு செய்து அப்டேட் செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, நாகைக்குப் புறப்பட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழக முதல்வர், என்னை நேரில் நாகப்பட்டினம் சென்று நிலையை பார்வையிடச் சொன்னார். அதன்படி அங்கு செல்கிறேன். மாவட்ட கலெக்டரிடம் பேசி பணிகளை ஒருங்கிணைத்துள்ளோம். அதிகாரிகள் கொண்ட வாட்ஸ் அப் குழு மூலம் அப்டேட்களை பெற்று வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications