வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றிய ருசிகர தகவல்கள்!
சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்றார். பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்ததோடு, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான முன்னுதாரண முயற்சிகளையும் மேற்கொண்டார்.
அரசுப் பள்ளி மாணவர்களை வெளிநாட்டு சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்வது, தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு நேரில் ஆய்வுக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடியது என அசர வைத்தார். அன்பில் மகேஷ் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

தொடர் ஓட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் மிகுந்த நெருக்கம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உற்ற நண்பன், அன்பில் தர்மலிங்கத்தின் பேரன், எதையும் சாதித்துக்கொள்ள முடியும் என்ற உயர்ந்த இடம், என பல்வேறு பின்னணிகள் இருந்தாலும் கூட, அதற்கான எந்த இறுமாப்போ, கர்வமோ இல்லாமல் 5 ஆண்டுகளாக ஓடி கவனம் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
இவர் பார்ப்பதற்கு சென்னையில் இருப்பதை போல் தோன்றும், அன்றைய தினமே திடீரென திருச்சியில் இருப்பார், அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மதுரையில் இருப்பார், தஞ்சையில் இருப்பார், நாகையில் இருப்பார். இதனை பார்த்து எப்படி வந்தார், எப்போது வந்தார் என கட்சிக்காரர்களே ஆச்சரியப்பட்டதை கண் கூடாக பார்த்திருக்கிறோம்.
அழைத்தவர்களுக்கு பெருமை
ஒரு பக்கம் அமைச்சர், இன்னொரு பக்கம் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கட்சி நிகழ்ச்சிகள் மட்டுமன்றி அரசு நிகழ்ச்சிகள், பொது அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்கள் நிகழ்ச்சிகள், மற்றும் 10 பேர் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு சிறிய புத்தக வெளியீட்டு விழா என்றாலும் கூட அதனை தவிர்க்காமல் கலந்துகொண்டு தன்னை நிகழ்ச்சிகளுக்கு அழைத்தவர்களை பெருமை அடையச் செய்துவிடுகிறார்.
இதில் கவனித்து பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வெளிமாவட்டங்களில் கலந்துகொள்வது ஓட்டுக்கு உதவாது என்பதால், பொதுவாக மற்ற அமைச்சர்கள் தங்கள் மாவட்டம் அல்லது தங்கள் சொந்த தொகுதியில் மட்டுமே இப்படி கலந்துகொள்வார்கள். ஆனால் அன்பில் மகேஸை பொறுத்தவரை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தை போல் தருமபுரிக்கு அழைத்தாலும் சென்று பேசுவார், தேனிக்கு அழைத்தாலும் சென்று பேசுவார்.
234 தொகுதிகள்
தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில், ஏன்.. தமிழக அமைச்சரவை வரலாற்றிலேயே ஒரு அமைச்சர் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்த முதல் பெருமையை பெற்றிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
தந்தையை போல் மகன்
அமைச்சர் அன்பில் மகேஸை பற்றிய மற்றொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், தன்னிடம் உதவியோ, கோரிக்கையோ வைப்பவர்களிடம் முடியாது என முகத்தில் அடித்தாற் போல் சொல்லாமல், "பார்த்துக்கொள்வோம்" என நம்பிக்கை வார்த்தைகளை மட்டுமே அளிப்பார்.
இது இவரது தந்தை மறைந்த அன்பில் பொய்யாமொழியிடம் இருந்த பண்பு என அவரை நன்கறிந்தவர்கள் நமக்கு கூறிய தகவலாகும். இதன் காரணமாகவே எப்போது பார்த்தாலும் அவரது சென்னை இல்லத்திலும் சரி, திருச்சி இல்லத்திலும் சரி இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
ஆசிரியராக மாறிய அமைச்சர்
முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மேடைகளில் கூறியதை போல், ஒரு ஆசிரியராகவே மாறியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். எந்த வகுப்புக்கு என்னென்ன பாடத்திட்டங்கள் இருக்கிறது என்பது வரை இப்போது அவருக்கு அத்துப்படி. ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை வீறுகொண்டு முன்னெடுத்த போதெல்லாம் அதனை பக்குவமாக கையாண்டு லாவகமாக பேசி நிலைமையை சுமூகமாக்கிய திறமையை இவரிடம் காண முடிந்தது.
எமோஷனல்
மகிழ்ச்சியோ, துக்கமோ உடனடியாக எமோஷனல் ஆகக்கூடியவர் அன்பில் மகேஷ். மகிழ்ச்சிக்குரிய செய்தி என்றால் வாய் விட்டு சத்தமாக சிரித்துவிடுவார், துக்க செய்தி என்றால் உடனடியாக அழுகையை, துயரத்தை நொடியில் வெளிக்காட்டி விடுவார் என்பது அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தெரிந்த விஷயம் என்கிறார்கள்.

திருவெறும்பூர் தொகுதி
234 தொகுதிகளுக்கும் தாம் தான் அமைச்சர் என்றாலும் தனது சொந்த தொகுதியான திருவெறும்பூர் மீது என்றும் தனிக்கவனத்தை செலுத்த அவர் தவறியதில்லை. அது எந்தளவுக்கு என்றால் "நம்ம மகேஸ் கூட்டத்துக்கு வருதாம்பா"... "நல்லாயிருக்கியா தம்பி".. என தொகுதிவாசிகள் உரிமையோடு பேசக்கூடிய வகையில் தொகுதி மக்களுடனான நல்லுறவு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications