"மூன்றாவது கண்".. அனைத்து அரசு பேருந்துகளிலும் வரப்போகுது மாற்றம்.. திமுக அமைச்சர் அதிரடி அறிவிப்பு
சென்னை: பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.
சமீப நாட்களாக அரசு பேருந்து பயணத்தில் பல்வேறு மாற்றங்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், இதனை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் சேவையை அறிமுகம் செய்தது. அதாவது சென்னையிலிருந்து கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும், அங்கிருந்து சென்னைக்கும் பார்சலை இனி அரசு பேருந்துகளில் அனுப்பலாம்.
இப்படி தனியார் பேருந்துகளிலும் பார்சல் சர்வீஸ் வசதி இருக்கிறது என்றாலும் கூட அரசு பேருந்துகளில் குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பேருந்துகளில் விளம்பரம் செய்யவும் அரசு முடிவெடுத்தது. முன்பு பேருந்தின் பின்புறம் மட்டும் விளம்பரம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது முழு பேருந்தே விளம்பர டிசைனில் மாற்றப்படும்.

குற்றச் செயல்கள்
இப்படியாக நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகத்தை அரசு மீட்டெடுக்க முயன்று வருகிறது. வருவாய் பற்றாக்குறை இருந்தாலும், மறுபுறம் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளும் அரசு பேருந்துகளில் மேலெழுந்தன. செயின் திருட்டு, பெண்களிடம் அத்து மீறுதல், நடத்துநருடன் சண்டை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து புகாராக வந்துக்கொண்டிருந்தது. இதனையடுத்து இதற்கு தீர்வு காண அரசு மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியது. இது மக்களிடம் குறிப்பாக பெண் பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்றது. அதேபோல இந்த கேமராக்கள் பொருத்திய பின்னர் குற்றச் செயல்களும் ஓரளவு குறைந்தன.

விவாதம்
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது 18 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். அதில் அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் எனும் அறிவிப்பு முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு அனைத்து தரப்பிலிருந்தும் வரவேற்று குவிந்து வருகிறது. அதேபோல போக்குவரத்து கழக பணிமனைகளில் உணவகங்கள் நடத்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் முன்வந்தால், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அற்புதமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு
மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரே மாதத்தில் 5 முறை முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு அடுத்த பயணங்களில் 50 சதவிகிதம் கட்டண சலுகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு தொடங்கி வைக்கப்பட்ட மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்துள்ளனர். இதனால் பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பாகிறது" என்று கூறினார். சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது.

மாற்றம்
இந்த நிதியுடன் மாநில அரசும் ரூ.5 ஆயிரம் வழங்கும் என்று அமைச்சர் சிவசங்கர் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும், "ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை இனி இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். போக்குவரத்து துறையை பொறுத்த அளவில் தனியார் மயம் என்கிற பேச்சுக்கே இடமில்லை" என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications