குடிசை மாற்று வாரியம் சார்பில் 15,000 வீடுகள் மறுகட்டுமானம்! அமைச்சர் தாமோ அன்பரசன் புது தகவல்!
சென்னை: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் நடப்பாண்டில் 15,000 வீடுகள் மறுகட்டுமானம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தாமோ அன்பரசன் புது தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்கள் கால மாற்றத்தால் வலிமை இழந்து, சென்னையில் மட்டும் 27,000 வீடுகள் வாழத் தகுதியற்றது என கண்டறியப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

அமைச்சர் பேச்சு
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஓக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் தாமோ அன்பரசன் பேசியதாவது; ''பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை கல்வியில் ஊக்குவித்து சமுதாயத்தின் மேல்நிலைக்கு கொண்டு வருவதே முதல்வர் ஸ்டாலினின் இலட்சியம்.''

நம் குடியிருப்பு
''குடியிருப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள "நம் குடியிருப்பு நம் பொறுப்பு" திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. குடியிருப்போர் நலச் சங்கங்களின் 50% பங்களிப்புடன், வாரியத்தின் 50% நிதியும் சேர்த்து, இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்கள் கால மாற்றத்தால் வலிமை இழந்து, வாழத் தகுதியற்றதாக உள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 27,000 வீடுகள் கண்டறியப்பட்டுள்ளது.''

15,000 வீடுகள்
''இதில் 7,500 வீடுகள் ரூ.1,200 கோடி மதிப்பில் நடப்பாண்டு கட்டப்பட உள்ளது. இப்பணி நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதில் குடியிருப்போருக்கு மறுகட்டுமான காலத்தில் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வந்த ரூ8,000 தற்போது ரூ.24,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். வரும் நிதியாண்டான 2022-23ல் மேலும் 15,000 வீடுகள் மறுகட்டுமானம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டுகளில் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டி அங்கு குடியிருப்போருக்கே வீடுகள் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.''

நிபுணர் குழு
''15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களின் பழுதுகளை நீக்கி புதுப்பொலிவு பெற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.'' எனக் கூறினார். இதனிடையே சென்னையில் வாழத் தகுதியற்ற வீடுகள் குறித்த அறிக்கையை அண்மையில் அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழு அரசிடம் சம்ர்பித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications