சினிமா கூட பாருங்க! டிவி சீரியல் மட்டும் பார்க்காதீங்க! மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் அட்வைஸ்!
சென்னை: சினிமா கூட பாருங்க ஆனால் தயவுகூர்ந்து தொலைக்காட்சி சீரியல்களை மட்டும் பார்க்காதீங்க எனக் கூறி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.
அதேபோல் செல்போன்களுக்கு அடிமையாகும் பழக்கத்தை மாணவிகள் கைவிட வேண்டும் என்றும் நேரத்தை நல்ல முறையில் உபயோகப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் கீதா ஜீவன்
மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் ஏற்பாட்டில் சென்னை ராணி மேரிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கினார். அந்த வகையில் பெண்கள் நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும் என்றும் பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்கிற அளவுக்கு இன்று சேனல்கள் அதிகமாகிவிட்டதாக தெரிவித்தார்.

செய்தி தொலைக்காட்சி
பொழுதுபோக்கு சேனல்களை பார்ப்பதற்கு மத்தியில் பெண்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் கட்டாயம் நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது செய்தித் தொலைக்காட்சிகளை பார்க்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். அறிவாற்றலை வளர்ப்பதற்கு செய்தித் தொலைக்காட்சிகள் பயன்படும் எனக் கூறினார். இதேபோல் நாள் முழுவதும் செல்போனுக்கு அடிமையாகி கிடக்காமல் தேவையான போது மட்டும் அதை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

சீரியல் பார்க்காதீங்க
மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக தொலைக்காட்சி சீரியல்கள் பார்ப்பதை மாணவிகள் தவிர்க்க வேண்டும் என மிகுந்த அக்கறையோடு அறிவுறை வழங்கினார். இன்றுள்ள டிவி சீரியல்களில் பெரும்பாலும் பெண்களை அடிமைப்படுத்தியே காட்சிகள் அமைப்பதாக வேதனைத் தெரிவித்துள்ளார். வில்லி உட்பட தவறான பாத்திரங்களில் பெண்களை மையமாக வைத்து தான் சீரியல்கள் தயாரிப்பதாக வேதனைத் தெரிவித்தார்.

சினிமா பாருங்க
சினிமா கூட பார்க்கலாம் என்றும் இப்போது வெளியாகும் சினிமாக்களில் கற்றுக்கொள்வதற்கு பல தகவல்கள் இருக்கிறது எனவும் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார். மேலும், பெண்கள் படித்துவிட்டு வீட்டில் சும்மா இருப்பதை தவிர்த்து சமூகத்தில் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எதிர்மறை எண்ணங்களில் இருந்து பெண்கள் முதலில் வெளியே வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications