விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! உங்களை அவர்கள் கட்டாயப்படுத்தினால் புகார் தரலாம்! விவரம் இதோ!
சென்னை: விவசாயிகள் விரும்பும் உரங்களைத் தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வாங்கிட கட்டாயப்படுத்தும் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார்.
தமிழக தழுவிய அளவில் விவசாயிகளிடம் இருந்து எழுந்த புகார்களை தொடர்ந்து அதிரடி அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் பின்வருமாறு;

கூட்டுறவுத்துறை
கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் 4,356 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக, விவசாயிகளுக்குத் தேவையான யூரியா, டி.ஏ.பி, எம்.ஓ.பி மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகிய இரசாயன உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உரங்கள் பயிர்க்கடனில் ஒரு பகுதியாகவும் மற்றும் ரொக்கத்திற்கும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

தொடக்க வேளாண்மை
நடப்பு குறுவை மற்றும் சம்பா பருவத்தில், உரங்களுக்கான கச்சாப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் இறக்குமதி பற்றாக்குறை ஆகியவை நிலவி வந்த போதிலும், தமிழ்நாட்டில், இதுவரை 1,72,182 மெ.டன் யூரியா, 91,839 மெ.டன் டி.ஏ.பி. 67,620 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1,71,880 மெ.டன் காம்ப்ள க்ஸ் ஆக மொத்தம் 5,03,521 மெ.டன் இரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுக் கடன்
விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை தேவையான அளவில் மட்டும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் தாங்கள் பெறும் பயிர்க்கடனில் ஒரு பகுதியாகவோ அல்லது ரொக்கமாகவோ பெற்றுக்கொள்ளலாம். இது தவிர வேறு எந்த உரங்களோ அல்லது விவசாய இடுபொருட்களோ கூடுதலாக வாங்குவது கட்டாயமல்ல, இது தொடர்பாக உரிய அறிவுரைகள் மண்டல இணைப்பதிவாளர்கள் மூலமாக அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை
எனவே, விவசாயிகள் விரும்பும் உரங்களைத் தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வாங்கிட கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் இது தொடர்பான புகார்களை மாவட்டத்திலுள்ள கூட்டுறவுத்துறையின் மண்டல இணைப்பதிவாளர் அவர்களுக்கு தெரிவிக்கலாம்.












Click it and Unblock the Notifications