நகைக்கடன் தள்ளுபடி... ஒரு வாரத்தில் அரசாணை... 11 லட்சம் பேர் பயனடைவர் -அமைச்சர் ஐ.பெரியசாமி
சென்னை: கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றிருந்தவர்களின் கடன் தள்ளுபடி குறித்த அரசாணை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்பட்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதன் மூலம் தமிழகம் முழுவதும் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என்ற தகவலையும் அவர் தெரிவித்திருக்கிறார். கூட்டுறவுத்துறை வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் 20 கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் தள்ளுபடி செய்யப்படுவது இதுவே முதல்முறை எனவும் அவர் கூறியிருக்கிறார்.

கூட்டுறவுத்துறையில் சீர்த்திருத்தத்தை கொண்டு வருவதற்காக சிரத்தை எடுத்து பணியாற்றி வருவதாகவும் 15 கூட்டுறவு சங்கங்களில் 12 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறையில் யாருக்கு என்ன கடன் தரப்பட்டுள்ளது என்ற விவரத்தை கணினி மூலம் அறிந்துகொள்ளும் வகையில் முற்றிலும் கணினிமயமாக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் 6 மாதத்திற்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் எனவும் அவர் கூறினார். இதேபோல் சுய உதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பது பற்றி ஆலோசித்து வரும் தகவலையும் அவர் வெளியிட்டார். இது குறித்த அறிவிப்பை முறைப்படி விரைவில் வெளியிடுவோம் என்ற உறுதியையும் அமைச்சர் ஐ.பி. அளித்திருக்கிறார்.
சட்டமன்றத்தில் கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். 2006-2011 ஆட்சிக்காலத்தின் போது கூட்டுறவுக் கடனை முதல்முறையாக தள்ளுபடி செய்த ஒரே முதலமைச்சர் கருணாநிதி என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு மிக முக்கியமானது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்னும் ஒரு வாரத்தில் இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றியை ஈட்டியுள்ள நிலையில், கிராமப்புற மக்களுக்கு பரிசாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.












Click it and Unblock the Notifications