குரல்வளையை நெரிக்கும் தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்களுக்கு அநீதி! கொந்தளித்த ஐ.பெரியசாமி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தொகுதி மறுவரையறை மசோதா, தென் மாநிலங்களின் குரல்வளையை நெரிக்கக்கூடியது எனவும், மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில், அவசரக்கோலமாக லோக்சபா தொகுதி மறுவரையறை செய்யும் சட்டத்தை கொண்டு வருவது, மறைமுகமாக தென் மாநிலங்களுக்கு அநீதி இழைத்து, பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சூழ்நிலையில் இன்று 16 முதல் 18ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாராளுமன்ற தொகுதிகள் மறு வரையறை குறித்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

Constitutiion Bill

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் திமுக அலுவலகம் வெளியே அமைச்சர் ஐ பெரியசாமி பாராளுமன்ற தொகுதி மறு வரை மசோதாவை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

பின் அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது," இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை தமிழகம் மிகச் சிறப்பாக நிறைவேற்றியது. இந்நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்கள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் சட்ட மசோதாவை கொண்டு வருகிறார்கள். இதற்கு தமிழகம் கடுமையான ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மாநிலத்திற்கு என்ன பிரதிநிதித்துவம் இருந்ததோ, அதற்கு ஏற்ற விகிதாச்சாரப்படி சட்டசபை, லோக்சபா தொகுதிகள் நமக்கு கிடைக்க வேண்டும்.

உத்திரபிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை வைத்து மத்தியிலே ஆட்சியில் தொடரலாம் என்ற குறுக்கு வழியை பா.ஜ. கையாண்டு வருகிறது. இது சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஏற்கனவே அரசியலமைப்புச் சட்டப்படி பிரிக்கப்பட்ட இடங்கள், மறுக்கப்படுவதாகத் தெரிகிறது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதனால், தென் தமிழகம் மட்டுமல்ல, மக்கள்தொகை குறைவாக உள்ள வடகிழக்கு மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கிறது.

இந்த மசோதா எதிர்காலத்தில் நாட்டையே துண்டாடக்கூடிய நிலைமைக்கு சூழ்நிலையை உருவாக்கக்கூடியது. எதிர்க்கட்சிகளின், தென் மாநிலங்களின் குரல்வளையை நெரிக்கக்கூடியது. எந்த மாநிலமாக இருந்தாலும் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் சமமாக இருக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் வழிமுறை வகுத்துக் கொடுத்துள்ளார். இன்று அதெல்லாம் சுக்கு நூறாகி உள்ளது. ஜனநாயக நாட்டின் குரல்வளையை நெரிக்கும் அளவிற்கு நமது பிரதிநிதித்துவத்தை மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நாடுமுழுவதும் பா.ஜ.அரசு போராட்டத்தை சந்திக்கும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி தேர்தலில் வெற்றி பெறுவாரா எனத்தெரியவில்லை. இந்நிலையில், தொகுதி மறுவரையறை சட்டம் குறித்து அவர் சொல்வது நியாயம் இல்லை. அவர், பா.ஜ.வோடு கூட்டணி சேர்ந்ததால் அவங்களுக்கு ஆதரவாக உள்ளார். நாளைக்கே, அவர் கட்சி மாறாலாம். தமிழகம், மக்கள் நலனுக்கு விரோதமாக, நமது உரிமைக்கு எதிராக பழனிச்சாமி இருக்கிறார்.

அது நல்லதல்ல, அவரை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தேர்தல் சமயமென்பதால் எம்.பி.க்கள் அவரவர் தொகுதியில் இருக்க வேண்டிய நிலை. இந்த அவசியம் பழனிசாமிக்கு இல்லை. ஏனெனில் அவர்களுக்கு எந்த எம்.பி.யும் இல்லை. அவர்கள் பா.ஜ.வோடு ஒட்டுமொத்தமாக உறவாகி, அங்கேயே ஐக்கியமாகிவிட்டார்கள். ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்கள் தேர்தல் கூட்டணிக்காக எங்கு வேண்டுமானாலும் போவார்கள்‌. அவர்களின் நிலைப்பாடு நிலையானது அல்ல.

அந்த மாநிலத்தின் உரிமையைக் காக்க, மக்களுடைய எண்ணத்தைக் காக்க, எண்ணத்தின் அடிப்படையில் அவர்கள் சொல்லும் கருத்து உண்மையானது அல்ல. காலத்துக்கு ஏற்றார்போல அவர்கள் மாறுவேஷம் போடுவார்கள். ஆனால் நாம் அப்படி வேஷம் போட முடியாது. தமிழக மக்களின் உரிமை, பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் சொல்லும் கருத்தின் முழு வடிவம் எனக்கு தெரியவில்லை. தேர்தல் நடக்கும் இந்த சமயத்தில் இந்த சட்டத்துக்கு என்ன அவசரம் வந்தது.

அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பேசி, ஒருமித்த கருத்தோடு சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். 120 கோடி மக்களுடைய கருத்தொற்றுமை அதில் பிரதிபலிக்க வேண்டும். அப்படியில்லாமல் அவர்கள் விருப்பத்துக்காக கொண்டு வரும் சட்டத்தில் குறைபாடு உள்ளது. சட்ட மசோதா மீது விவாதம் நடத்தி திருத்தங்களை பதிவு செய்யவேண்டும். அந்த கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் சட்டத்தை திருத்த வேண்டும். ஆனால் இங்கு அந்த வாய்ப்பே கொடுக்கப்படவில்லை.

எந்த அடிப்படையும் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் கருத்துரிமை மறுக்கப்படுகிறது. பிடிக்கவில்லை என்பதற்காக முதல்வர், துணை முதல்வர் குறித்து பேசுவது அநாகரிகமாக பேசுவது நியாயமல்ல. அப்படி பேசுபவர்களுக்கு ஞானம் இல்லை என்றுதான் சொல்ல முடியும். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தும், இப்போதுவரை எந்த பதிலும் மத்திய அரசு சொல்லவில்லை என்றால், அந்த மசோதாவில் தப்பு உள்ளது என அர்த்தம்.

மறுவரையறை மசோதாவை சட்டமாக்குவதில் உள்நோக்கம் உள்ளது. தமிழ்நாட்டில் 40 எம்.பி.சீட் மதச்சார்பற்ற கூட்டணி பக்கம் உள்ளது. இந்நிலையில், தொகுதி மறுவரையறை பா.ஜ.வுக்கு எதிர்ப்பான மனநிலையை மாற்றும், அதற்கு இப்போதே அணை போட்டுப் பார்ப்போம் என முயற்சி செய்கிறார்கள். அது நடக்காது, அடிக்கிற சுனாமியில அவ்வளவும் அடிச்சுட்டுப் போகும்" என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+