தாம்பரம் மாநகராட்சி இன்னும் பெரியதாக போகிறது.. வண்டலூர் மட்டுமல்ல.. அமைச்சர் கேஎன் நேரு குட்நியூஸ்
சென்னை: தாம்பரம் மாநகராட்சி என்பது தற்போது இருக்கும் அளவோடு இல்லாமல் சுற்றுப்பகுதியில் இருக்கும் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளும் தாம்பரம் மாநகராட்சிகுள்ளாக வருவதற்காக குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் . எனவே தாம்பரம் விரைவில் பெரிய மாநகராட்சியாக உருவாகும் என்ற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன் நேரு கூறினார்.
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் கடந்த 2021ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. தாம்பரத்தையொட்டி உள்ள பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், மற்றும் அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகளும், சிட்லப்பாக்கம், மாதம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை மற்றும் திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளும் இணைந்த காரணத்தால் தாம்பரம் பெருநகராட்சி, மாநகராட்சியாக மாறியது. தற்போதைய நிலையில் 70 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி இருந்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சியின் மேயர் தேர்தலில் வென்ற திமுகவைச் சேர்ந்த வசந்தகுமாரி பதவி வகித்து வருகிறார்.

இதனிடையே சென்னைக்கு நிகராக சென்னையின் புறநகர் பகுதிகளும் வளர்ந்துள்ளால், தாம்பரத்திற்கும் சென்னைக்கும் இடையில் உள்ள பகுதிகள் அத்தனையும் அப்படியே தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. சென்னையை இதற்கு மேல் விரிவாக்கம் செய்யாமல் பக்கத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியில் விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் மக்கள் தொகை 7.23 லட்சமாக இருக்கிறது . தாம்பரம் மாநகராட்சி பரப்பளவு 87.64 சதுர கிலோமீட்டர் ஆக உள்ளது. இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் 18 ஊராட்சிகள் இணைய உள்ளதால் அதன் பரப்பளவு 172.34 ஆக உயர உள்ளது. இந்த 18 ஊராட்சிகளில் உள்ள மக்கள் தொகை 2.85 லட்சம் ஆகும். இந்த மக்கள் தொகை காரணமாக தாம்பரம் மாநகராட்சி மக்கள் தொகை எண்ணணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிடும்.
தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பின் படி, தாம்பரம் மாநகராட்சியில் ஊரப்பாக்கம் , வண்டலூர், திருவாஞ்சேரி, அகரம்தென், மதுராப்பாக்கம், ஒட்டியபாக்கம், சித்தாலப்பாக்கம் , பெரும்பாக்கம், வேங்கை வாசல், மேடவாக்கம், நன்மங்கலம் , கோவிலம்பாக்கம், முவரசம்பட்டு , திரிசூலம் , காவர் பஜார், பொழிச்சலூர், முடிச்சூர், வேங்கடமங்கலம் ஆகிய 18 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைய போகின்றன.
மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்படுவதால், மாநகராட்சியில் எல்லை அதிகரிப்பதால், மாநகராட்சிக்கு வருவாய் பெருகும் என்பதுடன் மாநகராட்சி சுற்றியும் வளர்ச்சி அதிகரிக்கும், குடிநீர், தூய்மை பணி உள்ளிட்டவை முறையாக நடைபெறும். அதேநேரம் சொத்து வரி கணிசமாக உயரும். அரசுக்கு வருவாய் உயரும் அதேநேரம் மக்களுக்கு சுமையும் அதிகரிக்கும். எனினும் வளர்ச்சி திட்ட பணிகள் நகரமயமாக்கலுக்கு ஏற்ப கிடைக்கும். தாம்பரம் மாநகராட்சி விரிவாவதன் காரணமாக 40 முதல் 50 கவுன்சிலர்கள் எண்ணிக்கை உயரும் என்கிறார்கள்.
இதனிடையே தாம்பரம் மாநகராட்சியை சுற்றுப்பகுதியில் இருக்கும் கிராமங்கள், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்த்து பெரிய மாநகராட்சியாக உருவாகும் என அமைச்சர் கேஎன் நேரு, செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார். தாம்பரம் சானடோரியத்தில் தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் 43.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ளது . இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.
இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, "தாம்பரத்தை மாநகராட்சியாக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அலுவலகம் கட்டப்பட வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் 43.40 கோடி நிதி ஒதுக்கி, வருவாய்த் துறையில் இருந்து தாம்பரம் மாநகராட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இது சில காரணங்களால் ஒரு வருடம் தாமதம் ஆகிவிட்டது. தற்போது நிதி வழங்கப்பட்டிருப்பதால் ஒரு வருடத்தில் தாம்பரம் மாநகராட்சி கட்டடம் கட்டி முடிக்கப்படும். இந்த கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார்.
தாம்பரம் மாநகராட்சி என்பது தற்போது இருக்கும் அளவோடு இல்லாமல் சுற்றுப்பகுதியில் இருக்கும் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளும் தாம்பரம் மாநகராட்சிகுள்ளாக வருவதற்காக குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. எனவே தாம்பரம் பெரிய மாநகராட்சியாக உருவாகும். உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் உள்ளது. அனைத்து அரசு நலதிட்டங்களை நிறைவேற்றுவதற்காக தாம்பரம் மாநகராட்சியை விரிவாக்கம் செய்து, இங்கு இருக்கிற பகுதிகளில் அரசினுடைய திட்டங்களை நிறைவேற்றுவோம். மழை பெய்ய வேண்டும்... இல்லையென்றால் குடி தண்ணீருக்கு சிரமமாகிவிடும்.. தமிழகம் முழுவதும் மழை பெய்தால் தான் மக்களுக்கு நல்லது.. குடிக்க தண்ணீர் வேண்டும்.. எனவே, மழை பெய்வதால் இரண்டு நாள் ஏற்படும் சிரமத்தை பார்க்க வேண்டாம்" இவ்வாறு கே.என்.நேரு கூறினார்.












Click it and Unblock the Notifications