எம்எல்ஏவாக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா! நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியுமா?
சென்னை: அமைச்சர் கீர்த்தனா இன்று சட்டமன்றத்தில் எம்எல்ஏவாக பதவி ஏற்கவில்லை. இது முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருக்கும் நிலையில், எம்எல்ஏவாக பதவியேற்காதவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்க முடியாது என்பதால் விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இருப்பினும் பெரும்பான்மை இல்லாததால் விஜய்யால் உடனடியாக முதலமைச்சராக பதவியேற்க முடியாமல் இருந்தது.

இதனையடுத்து இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சியின் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றிருந்தார். தவெக தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் வரும் புதன்கிழமைக்குள் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் 17வது சட்டமன்ற அமர்வு கூடியிருக்கிறது. எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர். இதில், தவெக அமைச்சரான கீர்த்தனா பதவியேற்கவில்லை. எம்எல்ஏவாக வெற்றிப்பெற்றதற்கான சான்றிதழை கீர்த்தனா கொண்டுவராததால் அவரால் பதவியேற்க முடியாவில்லை. அதேபோல சேந்தமங்கலம் தவெக எம்எல்ஏ சந்திரசேகரும் வெற்றி சான்றிதழ் கொண்டு வராததால் அவராலும் எம்எல்ஏவாக பதவியேற்க முடியவில்லை.
இதனால் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், இவர்களால் பங்கேற்க முடியாது. எனவே விஜய்க்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 118 என குறைந்திருக்கிறது.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு நபர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் பதவியேற்பு உறுதிமொழி எடுக்காதவரை சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 188-வது பிரிவின்படி, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தனது இருக்கையில் அமருவதற்கு முன்பாக, ஆளுநர் அல்லது அவாரால் நியமிக்கப்பட்ட நபர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்து கையெழுத்திட வேண்டும். இந்த உறுதிமொழியை எடுக்கும் வரை அவர் ஒரு முழுமையான உறுப்பினராக கருதப்பட மாட்டார்.
வாக்களிக்க முடியுமா?
பதவியேற்காத ஒரு எம்.எல்.ஏ, சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு உட்பட எந்தவொரு வாக்கெடுப்பிலும் பங்கேற்க முடியாது. அவர் சட்டமன்றத்திற்குள் நுழைய முடியுமே தவிர, அவை நடவடிக்கைகளில் வாக்களிக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது.
மீறி வாக்களித்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 193-ன் படி, அவ்வாறு விதிமீறலில் ஈடுபடும் நபருக்கு அவர் பங்கேற்கும் ஒவ்வொரு நாளுக்கும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவர் அளித்த வாக்கும் செல்லாததாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications