மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசாணை வெளியிட்டதே நாங்கதான் - அமைச்சர் மா.சுப்பிரணியன் காட்டம்
சென்னை: சிறாருக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் நாட்டுக்கே முன்னோடியாக இருக்கிறது எனவும், மருத்துவக் கல்லூரிகளுக்கு திமுக ஆட்சிக்காலத்தில்தான் அரசாணை வெளியிடப்பட்டது என மக்கள் நலவாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்கினார்.

முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம்
நிகழ்ச்சிக்கும் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் , ஒன்றிய அரசின் காப்பிட்டு திட்டத்தை ஒருங்கிணைத்து ரூ.1,20,000 ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தினரின், குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவரும் மருத்துவ பயன்பெறும் வகையில் இந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டம்
விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த திட்டம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே இந்த புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது எனவும், ஏற்கனவே 1.37 கோடி குடும்பத்தினர் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர் எனவும் கூறிய அமைச்சர், புதிதாக இந்த திட்டத்தில் இணைவோர் உடனடியாக சம்பத்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டால், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ பயன் கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அதிக பயனாளிகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ம் தேதி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கானோர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர் எனக் கூறிய அமைச்சர், குறிப்பாக 7-ம் தேதி மே மாதத்தில் இருந்து நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 31,145 பேருக்கு, 382.05 கோடி அளவுக்கு இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர் எனவும், அதேபோல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளும் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, 32,23,064 பேருக்கு ரூ.182. 64 கோடி செலவில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளும் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தபட்டுள்ளது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகம் முன்னோடி
அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய அமைச்சர், சிறாருக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் நாட்டுக்கே முன்னோடியாக இருக்கிறது எனவும் முன்களப் பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் எனக் கூறினார். மேலும் இந்த வாரம் பொங்கல் பண்டிகையையொட்டி மெகா தடுப்பூசி முகாம் இல்லை எனவும், மெகா தடுப்பூசி முகாம் இல்லாவிட்டாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறினார். மருத்துவக் கல்லூரிகளுக்கு திமுக ஆட்சிக்காலத்தில்தான் அரசாணை வெளியிடப்பட்டது எனக் கூறிய அவர், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்றார்.












Click it and Unblock the Notifications