வெளிநாடுகளில் 80 சதவீதம் சுகப்பிரவசம்! ஆனால் தமிழகத்தில்? -மாசு சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை : தற்போது சிசேரியன் சதவீதம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதற்கு பெற்றோர்கள் தங்களுக்கு தேவையான தேதிகளில் குழந்தையை வெளியில் எடுப்பது தான் காரணம். இதை ஊக்கப் படுத்த கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளோம். சிசேரியனை தவிர்க்குமாறு தனியார் மருத்துவமனைக்கு கடிதம் எழுத உள்ளோம் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Recommended Video
பன்றி காய்ச்சல் குறித்து அதிக கவனம் செலுத்துவதால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு இருக்காது என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பருவ மழை பேரிடர் கால தாய் சேய் நல சிறப்பு பணி பாராட்டி மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவ மனையில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அதன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று சான்றிதழ் வழங்கினர்.

ஒரே நாளில் பிறந்தன
சான்றிதழ் வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், "கடந்த 11ம் தேதி 24 மணி நேரத்தில் 68 குழந்தைகள் எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் பிறந்துள்ளது. இதில் 60 சதவீதம் சுகப்பிரசவமாகவும் 40% அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் குழந்தைகள் பிறந்தது. இந்த பணியில் 8 மருத்துவர்கள் 22 செவிலியர்கள் பணியாற்றி உள்ளனர். இவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

சுகப்பிரசவம்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 65% பிரசவம் நடைபெறுகிறது. 35% பேர் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இந்த எண்ணிக்கையில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் 100 பேரில் 65 பேருக்கு சுகப்பிரசவமாகவும், தனியார் மருத்துவமனையில் 100 பேரில் 37 பேருக்கு மட்டுமே சுகப்பிரசவமாக நடைபெறுகிறது.

சிசேரியன் எப்படி
மேற்கிந்திய நாடுகளில் 20% மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது. 80% சுகப்பிரசவமாக உள்ளது. முன்பெல்லாம் 100% சுகப்பிரசவம் மட்டுமே இருந்தது. தற்போது அது சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. சிசேரியன் சதவீதம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதற்கு பெற்றோர்கள் தங்களுக்கு தேவையான தேதிகளில் குழந்தையை வெளியில் எடுப்பது தான் காரணம். இதை ஊக்கப் படுத்த கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளோம். சிசேரியன் தவிர்க்குமாறு தனியார் மருத்துவமனைக்கு கடிதம் எழுத உள்ளோம்.

பன்றிகாய்ச்சல்
ஆறு இடங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான அவசரகால சிகிச்சை பிரிவு கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பன்றிக் காய்ச்சல் தொடர்பாக 13 நபர்களை பரிசோதனை செய்ததில் இரண்டு நபர்களுக்கு உறுதியாகி உள்ளது. அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல் கேரளா தமிழ்நாடு எல்லையில் தொடர்ந்து அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு இருக்காது. தற்போது வரை 463 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அண்ணாமலை
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தை இதுவரை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. ஆளுநர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கின்றார். தொடர்ந்து தமிழக அரசு இந்த விவகாரத்தை கண்காணித்து வருகிறது என்றார். தடுப்பூசி தொடர்பான அண்ணாமலை குறித்த கேள்விக்கு 1.05 கோடி தடுப்பூசியை பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கொடுக்கிறோம் அவர் திண்டாட்டம் இல்லாமல் செலுத்தட்டும்" இவ்வாறு கூறினார்.

மா சுப்பிரமணியன்
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக அலுவலகத்தில் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் டாகா மசாயுகி மரியாதை நிமித்தமாக தமிழ்நாடு மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சந்தித்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு நிதிபங்களிப்புடன் கட்டப்பட்ட கட்டிடத்தை வரும் வெள்ளிக்கிழமை பார்வையிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications