செருப்பு அணிய மாட்டேனு சொல்லிட்டு.. உலகமே சிரிக்குது அண்ணாமலை.. மா.சுப்பிரமணியன் பதிலடி!
சென்னை: செருப்பில்லாமல் நடப்பேன் என்று கூறிவிட்டு ஷூ அணிந்து வலம் வரும் அண்ணாமலையை பார்த்து உலகமே எள்ளி நகையாடுகிறது என்று அமைச்சார் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அநாகரீகத்தின் உச்சம் என்று தெரிவித்துள்ள அவர், அண்ணாமலையின் கேலி கூத்து நடவடிக்கைகள் அளவில்லாமல் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கரூரில் பாஜக சார்பாக நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துகள் திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அண்ணாமலை, இங்கிருக்கும் அலப்பறை பசங்க.. சொந்த ஊரை தாண்டினாலே யாருக்கும் தெரியாது.. அல்லக்கைகளை வைத்து கொண்டு அண்ணன் வருகிறார் என்று சொன்னால்தான் தெரியும்..

அவர்கள் பிரதமர் மோடியை பார்த்து குற்றம்சாட்டுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. பிரதமர் மோடி முன்பு தமிழ்நாடு வந்தால், நாங்கள் கோ பேக் மோடி என்றோம். இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடினு சொல்லிப் பாரு..
எங்க அப்பா முதலமைச்சர்.. எங்க தாத்தா முதலமைச்சர்னு சொல்லி பாரு.. பார்க்கலாம் என்று பேசினார். அண்ணாமலை பேசிய வீடியோ ட்ரெண்டான நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், அண்ணாமலைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. கல்வி தொடர்பான பிரச்சனை.
மத்திய அரசிடம் பேசி நிதி வாங்கி தர முடியவில்லை. இவர்கள் எல்லாம் சவால்விடுகிறார்கள். 2018ல் தமிழ்நாடு வந்த மோடி சுவற்றை உடைத்து கொண்டு திருட்டுத்தனமாக சென்றார். வீட்டில் சுவரொட்டி ஒட்டுவதாக அண்ணாமலை கூறி இருந்தார். முடிந்தால் வரச் சொல்லுங்கள்.. ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக கூறி இருந்தார். தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திமுகவினர் தரப்பில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. சோசியல் மீடியா தொடங்கி அனைத்திலும் திமுகவினர் அண்ணாமலையை கடுமையாக சாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அநாகரீகத்தின் உச்சம்.
திராவிட மாடல், முதலமைச்சர், துணை முதலமைச்சர் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்தவித அருகதையும் இல்லை. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என்று அனைத்திலும் தமிழக மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலை தொடர்ந்து செய்யும் கேலிக்கூத்து நடவடிக்கைகளுக்கு அளவில்லாமல் போகிறது.
திடீரென செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லிவிட்டு, தற்போது ஷூ அணிந்து வலம் வருவது , தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்வது உள்ளிட்ட செயல்களால் உலகமே அவரை கண்டு எள்ளி நகையாடுகிறது. அமைச்சர்கள் பதவிகளில் இருப்பவர்களை தற்குறி என்று சொல்லும் அளவிற்கு தற்குறித்தனமாக செயல்படும் அண்ணாமலை கண்ணாடி முன் நின்றால், அவரின் தற்குறித்தனங்கள் வரிசைக் கட்டி நிற்கும்.
அநாகரீகமானவர் என்பதை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நிரூபித்து கொண்டிருக்கும் அண்ணாமலை, ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு கொண்டே இருக்கிறார் என்பது நிதர்சனம். எதையும் சகித்து கொள்ள முடியாத ஒரு அரைவேக்காடு என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications